பஞ்சாபில் காவல்துறையினர் மீது தாக்குதல்; துணை ஆய்வாளரின் கை வெட்டப்பட்டது!

அவர்கள் சரணடைந்த போது அவர்களிடமிருந்து வாள்களையும், எரிவாயு சிலிண்டர்களையும் மீட்டதாக குப்தா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களோடு, மேலும் மூன்று பேரை காவல்துறையினர் விசாரணைக் கைதியாக வைத்துள்ளனர்

Patiala, Punjab:

தேசிய அளவில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முழு முடக்க நடவடிக்கையின் 21 நாட்களுக்கு அறிவித்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்திருந்தன. பஞ்சாபில் ஊரடங்கு உத்தரவு அமலிலிருந்த இன்று காலையில், பாட்டியாலா மாவட்டத்தில், காய்கறி சந்தையில் நடந்த ஒரு தாக்குதலில் காவல் துறையைச் சார்ந்த ஒருவரின் கை வெட்டப்பட்டுள்ளது. மேலும், இரண்டு காவலர்கள் படுகாயமடைந்துள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை துணை ஆய்வாளர் ஹர்ஜீத் சிங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று வருகின்றது.

நிகாங் என்று சொல்லப்படக்கூடிய மத குழுவை சார்ந்தவர்களை ஏற்றிவந்த வாகனம் ஒன்று சாலை தடுப்புகளில் மோதியுள்ளது. மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருக்கக்கூடிய காலகட்டங்களில் இவ்வாறு கூட்டமாக பயணிப்பது குறித்து காவல்துறையின் எச்சரித்து உள்ளனர். அப்போது எழுந்த சர்ச்சையில் அவர்கள் காவல்துறையினர் மீது இந்த தாக்குதலைத் தொடுத்துள்ளனர். என பஞ்சாப் காவல்துறைத் தலைவர் தின்கர் குப்தா என்.டி.டி.வி-யிடம் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடத்தியவர்கள் குருத்வாரா சாஹேப்பிற்கு தப்பிச் சென்றபின், காவல்துறையினர் முன்னெச்சரிக்கை தயாரிப்புகளோடு அங்கு சென்றனர். பின்னர் தலைவர்கள் தலைமையில் இரண்டுமணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு குற்றவாளிகள் சரணடைந்துள்ளனர். அவர்கள் சரணடைந்த போது அவர்களிடமிருந்து வாள்களையும், எரிவாயு சிலிண்டர்களையும் மீட்டதாக குப்தா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட மூன்று நபர்களோடு, மேலும் மூன்று பேரை காவல்துறையினர் விசாரணைக் கைதியாக வைத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்திற்கு வெளிநாடுகளிலிருந்த பலர் தங்களது ஊர்களுக்குச் சமீபத்தில் திரும்பியிருந்தனர். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பஞ்சாப் முதல்வர் தன்மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். மேலும், புதியதாகத் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்கள் பெரும்பாலும், இரண்டாம் நிலை பரவலோடு தொடர்புடையவர்கள்தான். எனினும், தொற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறிக்கொண்டிருக்கின்றது என முதல்வர் குறிப்பிட்டிருந்தார்.

தொற்றின் மூன்றாவது நிலை என்பது, தொற்று யாரிடமிருந்து பரவியது என்பதைக் கண்டறிய முடியாத நிலையாகும். ஆனால், இந்தியாவில் கொரோனா மூன்றாம் கட்டத்தினை எட்டவில்லை என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. பஞ்சாபில் 150 க்கும் மேற்பட்டவர்கள்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.