This Article is From Feb 23, 2019

பிரிவினைவாதிகள் கைதால் பதற்றம் : 12 ஆயிரம் ராணுவத்தினர் காஷ்மீர் விரைந்தனர்

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து பிரிவினைவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு வருகின்றன.

100 கம்பெனி படைகளை ஸ்ரீநகருக்கு மத்திய அரசு கூடுதலாக அனுப்பி வைத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது
  • அதிரடி சோதனைகள் காஷ்மீரில் அதிகப்படுத்தப்பட்டுள்ளன
  • பிரிவினைவாத தலைவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்
Srinagar:

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 12 ஆயிரம் ராணுவத்தினர் காஷ்மீர் விரைந்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பிரிவினைவாதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடவிருப்பதால் பதற்றத்திற்கு பஞ்சம் இருக்காது என்று கருதப்படுகிறது. இதையடுத்து கூடுதலாக 100 கம்பெனிப் படைகள் ஜம்மு காஷ்மீருக்கு விரைந்துள்ளன.

ஒரு கம்பெனிப் படையில் 80 முதல் 150 வீர்ர்கள் இருப்பார்கள். சராசரியாக 120 என வைத்துக் கொண்டாலும், சுமார் 12 ஆயிரம் துணை ராணுவத்தினர் காஷ்மீருக்கு விரைந்துள்ளனர். இதனால் மிகப்பெரும் அதிரடிக்கு மத்திய அரசு தயாராகி வருகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

புல்வாமாவில் கடந்த 14-ம்தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்கு பின்னர் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

நேற்றிரவு யாசின் மாலிக் ஸ்ரீநகரின் மைசுமாவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இதன்பின்னர் பிரிவினைவாத தலைவர்கள் சிலரும் கைதாகினர்.

ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமையை அளிக்கும் அரசமைப்பு சட்டம் 35 ஏ தொடர்பான வழக்கு திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதன் முடிவு சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தலாம் என கருதப்படுவதால் மத்திய அரசு முன்கூட்டியே அதிரடி காட்டுகிறது.

.