This Article is From Mar 05, 2019

''பாக். மீண்டும் தாக்கினால் அனைத்து விதத்திலும் பதிலடி கொடுக்க தயாராக உள்ளது இந்தியா''

பாகிஸ்தானின் மிகப்பெரும் தீவிரவாத பயிற்சி முகாமான பாலகோட்டில் 1000 கிலோ வெடிகுண்டுகளை வீசி இந்திய விமானப்படை அழித்தது.

New Delhi:

பாகிஸ்தான் மீண்டும் தீவிரவாத தாக்குதலை நடத்தினால் அந்நாட்டுக்கு பதிலடி தருவதற்கு இந்தியா அனைத்து விதங்களிலும் தயாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புல்வாமாவில் துணை ராணுவத்தினர் 40 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 

புல்வாமா சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானின் பாலகோட்டிற்குள் நுழைந்த இந்திய விமானப்படை அங்கு தீவிரவாத பயிற்சி முகாம்கள் மீது ஆயிரம் கிலோ வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. 

இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்கிற விவரம் ஏதும் வெளியிடப்படவில்லை. இதன்பின்னர் விங் கமாண்டர் அபிநந்தன் பிணைக் கைதியாக வைக்கப்பட்ட விவகாரம் உள்ளிட்டவற்றால் இரு நாட்டிற்கு இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, தூதரக ரீதியில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலையில் மத்தயி அரசு ஈடுபட்டுள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலை நாடியுள்ள இந்தியா, அங்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 

இதற்கு பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. கடந்த வாரம்கூட பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையில் மசூத் அசார் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகின. அவர் உயிரிழந்து விட்டதாகவும் செய்திகள் பரவின. இந்த நிலையில் மீண்டும் பாகிஸ்தானிடம் இருந்து மற்றொரு தீவிரவாத தாக்குதல் வராது என்று கூறுவதற்கு எந்தவொரு உறுதியும் இல்லை என நம்பப் படுகிறது.

அப்படி ஒருவேளை மீண்டும் பாகிஸ்தான் வாலாட்டினால் அந்நாட்டுக்கு கடுமையான பதிலடி கொடுப்பதற்கு இந்திய ராணுவம் அனைத்து விதங்களிலும் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

.