This Article is From May 17, 2019

காந்தியை அவமதித்த பிரக்யா தாகூரை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்: பிரதமர் மோடி

General Elections 2019: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரக்யா தாகூரை போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக தேர்வு செய்ததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதமர் மோடி அவர் தேர்தலில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்தார்.

காந்தியை அவமதித்த பிரக்யா தாகூரை ஒருபோதும் மன்னிக்கமாட்டோம்: பிரதமர் மோடி

Election 2019: முன்னதாக பிரதமர் மோடியே பிரக்யா தாகூரை போபால் வேட்பாளராக நியமித்தார்.

New Delhi:

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை தேசபக்தர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூரை, என்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரக்யா தாகூரை போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக தேர்வு செய்ததற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதமர் மோடி அவர் தேர்தலில் போட்டியிட ஒப்புதல் தெரிவித்தார்.

முன்னதாக சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பலரும் கண்டனங்களும், ஆதரவுகளும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் கருத்துக்கு பதிலளித்த மத்திய பிரதேசம் மாநிலம், போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர், நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தராக இருந்தார், இருக்கிறார், இன்னும் இருப்பார். அவரை தீவிரவாதி என்று அழைப்பவர்களுக்கு மக்கள் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

saadhvi pragya

இதைத்தொடர்ந்து, பிரக்யா சிங்கின் இந்த கருத்திற்கு பாஜக கண்டனம் தெரிவித்தது. கோட்சே பற்றிய பிரக்யா சிங்கின் கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடில்லை என்றும் இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைமை கூறியது.

தொடர்ந்து, பாஜக சார்பில் கண்டனம் தெரிவித்ததை அடுத்து தம்முடைய கருத்துக்கு பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். மேலும், பாஜகவின் உண்மையான சேவகியான நான், கட்சி மீது முழு நம்பிக்கை வைத்துள்ளேன். கட்சியின் நிலைப்பாடு என்னவோ, அதுவே என்னுடைய நிலைப்பாடு. யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. அப்படி யாரையேனும் எனது காயப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நாட்டிற்காக காந்தி செய்த எதையும் மறக்க முடியாது. எனது கருத்துக்கள் ஊடகங்களால் திரித்து கூறப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இதனிடையே, பிரக்யா தாகூரை தொடர்ந்து, கர்நாடகா பாஜக எம்.பி., நளின் குமார் காடீல் தனது ட்விட்டர் பதிவில், கோட்சே ஒருவரை கொன்றார், கசாப் 72 பேரை கொன்றார், ராஜீவ் காந்தி 17,000 பேரை கொன்றார். இதில் யார் அதிக கொடூரமானவர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என பதிவிட்டு அவர் பங்குக்கு அவரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நீயூஸ்24 செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், காந்தியை அவமதித்த பிரக்யா தாகூரை என்னால் ஒருபோதும் மன்னிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, பாஜக தலைவர் அமித்ஷா கூறும்போது, கோட்சே செயலை யாரும் நியாயப்படுத்த முடியாது. பாஜகவை சேர்ந்த பிரக்யா சிங் தாகூர், அனந்தகுமார் ஹெக்டே, காடீல் ஆகியோர் தெரிவித்த கருத்துக்களில் கட்சிக்கு உடன்பாடில்லை, அது கட்சியின் கொள்கைக்கு முற்றிலும் மாறானது.

இதுகுறித்து அவர்களிடம் விளக்கம் கோரப்படும். ஒழுங்கு நடவடிக்கை குழுவானது 10 நாட்களுக்குள் அவர்களிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

.