This Article is From Sep 18, 2019

''தாய் மொழிக்கு பின்னர் இந்தியை கற்றுக் கொள்ளுமாறு கோரிக்கைதான் வைத்தேன்'' - அமித் ஷா!

கடந்த சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழி தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் தென் மாநிலங்களில் எதிர்ப்பைக் கிளப்பியது.

மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

New Delhi:

''பிராந்திய மொழிகள் பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்க வேண்டும் என்று ஒரு போதும் கூறியதில்லை. தாய் மொழிக்குப் பின்னர் இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த சனிக்கிழமையன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ட்விட்டர் பதிவு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழி தொடர்பாக அவர் கூறிய கருத்துக்கள் தென் மாநிலங்களில் எதிர்ப்பைக் கிளப்பியது. 

அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில், 'இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மொழியும் தனித் தன்மை கொண்டது. இருப்பினும், சர்வதேச அளவில் இந்தியாவை பிரதிபலிப்பதற்காக ஒரு பொதுவான மொழி இருப்பது அவசியமாகிறது. இன்றைக்கு நாடு முழுவதையும் ஒருங்கிணைக்கும் மொழியாக இந்தி இருக்கிறது. பெரும்பான்மையான இந்தியர்கள் இந்தியை பேசுகின்றனர், புரிந்து கொள்கின்றனர்' என்று குறிப்பிட்டிருந்தார். 

இதற்கு தென் மாநில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். குறிப்பாக கர்நாடக பாஜக தலைவரும், மாநில முதல்வருமான எட்டியூரப்பா  'கர்நாடகாவை பொறுத்தளவில் கன்னடம்தான் முதன்மை மொழி. அதற்கு முக்கியத்துவம் அளிப்பதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்' என்றார். 

கேரள முதல்வர் பினராயி விஜயன், 'இந்தியாவை இந்தி மொழி ஒருங்கிணைக்கிறது என்று கூறுவது அபத்தம்' என்று விமர்சித்திருந்தார். இதேபோன்று, தமிழகத்தில் ரஜினிகாந்தும், இந்தி மொழி திணிக்கப்படுவது போன்ற நடவடிக்கையை தென் மாநிலங்கள் எதுவும் ஏற்றுக் கொள்ளாது என்றார். 

இந்த நிலையில் சர்ச்சைகள் அதிகமானதை தொடர்ந்து, தனது ட்விட் குறித்து அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார். ''பிராந்திய மொழிகள் பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்க வேண்டும் என்று ஒரு போதும் கூறியதில்லை. தாய் மொழிக்குப் பின்னர் இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தேன். நானும்கூட இந்தி மொழி பேசாத குஜராத்தை சேர்ந்தவன். இந்த விவகாரத்தில் சிலர் அரசியல் செய்ய விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம்''  என்று அமித் ஷா விளக்கம் அளித்திருக்கிறார். 

.