This Article is From May 13, 2020

ஜூன் 1ம் தேதி முதல் துணை ராணுவப்படை கேன்டீன்களில் இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை!

நேற்றைய தினம் ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்த அதே வேளையில், 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்’திட்டத்தின் கீழ் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஜூன் 1ம் தேதி முதல் துணை ராணுவப்படை கேன்டீன்களில் இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை!

உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுதொடர்பாக தனது ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • துணை ராணுவப்படை கேன்டீன்களில் இந்திய தயாரிப்புகள் மட்டுமே கிடைக்கும்
  • இந்தியாவின் தற்சார்பு தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் - மோடி
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் - அமித்ஷா
New Delhi:

துணை ராணுவப்படை கேன்டீன்களில் ஜூன் 1ம் தேதி முதல் இந்திய தயாரிப்புகள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் சீர்குலைந்துள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் மோடி நேற்றைய தினம் ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பை அறிவித்த அதே வேளையில், 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்'திட்டத்தின் கீழ் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கூறிய நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இந்தியாவின் தற்சார்பு தன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் இந்திய தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்தி மோடி நேற்றிரவு கூறியதை குறிப்பிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது வரும் நாட்களில் இந்தியாவை நிச்சயமாக உலகளாவிய தலைமைக்கான பாதையில் கொண்டு செல்லும் என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

அந்தவகையில், அனைத்து மத்திய ஆயுத போலீஸ் படைகள் (CAPF) கேன்டீன்களிலும் சுதேசி இந்திய தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்யப்படும் என உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது ஜூன் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய ஆயுதப் படையை சேர்ந்த சுமார் 10 லட்சம் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தை சேர்ந்த 50 லட்சம் உறுப்பினர்கள் இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துவார்கள் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இந்த துணைராணுவப்படை கேன்டீன்களில் ஆண்டுக்கு ரூ.2,800 கோடி அளவில் விற்பனை நடந்து வருகிறது. மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CAPF), எல்லை பாதுகாப்பு படை (BSF), இந்தோ - திபெத் எல்லை போலீஸ் (ITBP), மத்திய தொழில் பாதுகாப்பு படை (CISF), தேசிய கமாண்டோ படை (NSG) போன்றவை துணை ராணுவ படைகளாக கருதப்படுகின்றன. 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் மற்றவர்களையும் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், இது பின்தங்கிய நேரமல்ல, ஆனால் ஒரு நெருக்கடியை வாய்ப்பாக மாற்றும் நேரம். ஒவ்வொரு இந்தியரும் இந்திய தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்துவதென தீர்மானித்துவிட்டால் நாடு தற்சார்பு பெறும் என்று தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி நேற்றிரவு உரையாற்றினார். அதில் அவர் கூறும்போது,

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. 'ஆத்மநிர்பர் பாரத் அபியான்' திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மீட்கும் வகையில் ரிசர்வ் வங்கி மூலம் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 

இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும். இது குறித்து நிதியமைச்சர் விரிவான தகவல்களை வெளியிடுவார் என்று கூறினார்.

.