This Article is From Aug 22, 2018

கதவு திறந்த நல் உள்ளங்கள், கேரள வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு உதவும் இணையதளம்

உதவி செய்வதற்கும், தங்க இடம் கொடுப்பதற்கும் தயாராக இருக்கும் மக்களையும், உதவிகளை நாடும் மக்களையும் இணைக்கும் ஆன்லைன் இணையத்தளம்

கதவு திறந்த நல் உள்ளங்கள், கேரள வெள்ளத்தில் வீடு இழந்தவர்களுக்கு உதவும் இணையதளம்

கடந்த 15 நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வந்தது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரளாவை தாக்கிய மிக கனமழை முடிவுக்கு வந்தது. வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில், மீட்பு பணிகளும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திரும்ப கொண்டு வரும் பணிகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்புவதால், பலர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். எனினும், பல முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உதவி செய்வதற்கும், தங்க இடம் கொடுப்பதற்கும் தயாராக இருக்கும் மக்களையும், உதவிகளை நாடும் மக்களையும் இணைக்கும் ஆன்லைன் இணையத்தளத்தை சென்னையைச் சேர்ந்த குழு கண்டறிந்துள்ளது.

v85s2bng

இந்த குழுவில், சென்னையை சேர்ந்த இளம் தொழிலதிபர்கள் சந்தோஷ் முருகானந்தம், மகேஷ் கோபாலகிருஷ்ணன், சக்திவேல் பன்னீர்செல்வம், லிஷா, இந்துஜா ரகுநாதன், ராம்குமார், நடிகர் ஆரி ஆகியோர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

q5rqkvbg

EachOneHostOne.com எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் மூலம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்க இடம் கொடுக்க விருப்பமுள்ளவர்கள், கேரள நிவாரண முகாம்களில் பணியாற்ற விரும்பும் தன்னார்வலர்கள், எலக்ட்ரீஷியன்கள், கார்பெண்டர்கள் ஆகியோர் பதிவு செய்யலாம். மேலும், உதவிகளை நாடும் மக்கள், இந்த இணையத்தளத்தை பயன்படுத்தி, உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்ப, முக்கியமான பணிகளை மேற்கொள்ள மனித வள உதவிகள் தேவைப்படுகின்றன. தமிழ்நாடு, கர்நாடக, கேரளா என எந்த மாநிலத்தில் இருந்தாலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த இணையத்தளம் உதவியாக இருக்கும்.

“உதவி செய்பவர்களையும், உதவி நாடுபவர்களையும் கனெக்ட் செய்வதற்கு இந்த டிஜிட்டல் இணையத்தளம் பயன்படும். இதன் மூலம், முகாம்களில் தங்க இடம் இல்லாத மக்களை, தானாக முன்வந்து உதவும் தன்னார்வலர்களின் இடங்களில் தங்க வைக்கலாம். மேலும், உதவி செய்ய நினைப்பவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி உதவி செய்யலாம். இந்த நேரத்தில் முக்கியமாக தேவைப்படும் மனித வள உதவியாளர்கள் இதில் பதிவு செய்தால், நிவாரண பணிகள் துரிதமாக நடைப்பெறும் ” என்று லிஷா தெரிவித்துள்ளார்.

நிவாரண பணிகளுக்கு உதவ நினைப்பவர்கள், உதவி வேண்டுபவர்கள், கனெக்ட் செய்ய விருப்பமுள்ளவர்கள், https://eachonehostone.com/ என்ற இணையத்தளத்தை அனுகவும்.

.