
Coronavirus: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பணி இல்லாமல் எப்படி பிழைத்திருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சிதம்பரம்.
ஹைலைட்ஸ்
- கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட PM-CARES நிதி உருவாக்கப்பட்டது
- அதிலிருந்து புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது
- இந்த ஒதுக்கீட்டைத்தான் விமர்சித்துள்ளார் ப.சிதம்பரம்
கொரோனா பரவலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட PM-CARES நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி ஒதுக்கப்பட்ட தொகையானது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைகளுக்கு சென்று சேராது என்று விமர்சித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்.
“ரூ 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள்.
மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது. இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது,” என்று கறாரான விமர்சனத்தை முன் வைத்தார் சிதம்பரம்.
The money will not be given to the migrant workers but to the State governments to meet the expenses of travel, accommodation, medicine and food for the migrant workers. But nothing will go to the hands of the migrant workers.
— P. Chidambaram (@PChidambaram_IN) May 14, 2020
தொடர்ந்து அவர், “PM-CARES, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைப் பார்த்து எல்லோரும் செய்யும் தவறை செய்து விடாதீர்கள். இந்த தொகையானது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கையில் தரப்படாது. மாறாக, மாநில அரசுகளிடம் தரப்படும். அவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆகும் போக்குவரத்து, தங்கும் இடம், மருத்துவம் மற்றும் உணவுச் செலவுகளை ஈடு செய்வார்கள். இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைக்கு ஒன்றும் சென்று சேராது,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பணி இல்லாமல் எப்படி பிழைத்திருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சிதம்பரம்.
“அனைத்துத் தடைகளையும் தாண்டி தனது சொந்த ஊருக்கு ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி சென்று சேர்ந்தார் என்று வைத்துக் கொள்வோம். கிராமத்தில் அவருக்கு எந்தப் பணியும் இல்லை. பணி இல்லை என்றால் அவருக்கு வருவாய் இல்லை. எப்படி அவர் வாழ்வார். குடும்பத்தை எப்படி வாழ வைப்பார்?” என்ற முக்கிய கேள்வியையும் எழுப்பியுள்ளார் சிதம்பரம்.
PM-CARES நிதியிலிருந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட 3,100 கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 2,000 கோடி ரூபாய், வென்டிலேட்டர்கள் வாங்கவும், 1,000 கோடி ரூபாய் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், 100 கோடி ரூபாய் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.