This Article is From Jun 30, 2020

சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது: மாஜிஸ்திரேட்

Tamil Nadu Custody Deaths: அவர்கள் கைது செய்யப்பட்ட ஜூன் 19ம் தேதி முதல் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது: மாஜிஸ்திரேட்

சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது: மாஜிஸ்திரேட்

ஹைலைட்ஸ்

  • சாத்தான்குளம் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவுகள் அழிப்பு
  • போதுமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருந்தும் தானாக அழியும் வகையில் செட்டிங்
  • நேரில் பார்த்த காவலர் ரேவதி விளக்கம் அளித்துள்ளார்.
Chennai/ New Delhi:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளது என சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு மாஜிஸ்திரேட் அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கொரோனா வைரஸ் பரவை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேரத்தை தாண்டி ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்ஸூம் அவர்களது மொபைல் கடையை திறந்து வைத்த குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்ட ஜூன் 19ம் தேதி முதல் காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிப் பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். 

பென்னிக்ஸ் (31) ஜூன் 22ம் தேதியும், அவரது தந்தை ஜெயராஜ் (59) அதற்கு அடுத்தநாளும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் காவல்துறையினரின் சித்தரவதை காரணமாகவே உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் கடுமையான உள்காயம் மற்றும் வெளி காயமும், ஆசன வாயில் இருந்து ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பான மாஜிஸ்திரேட் தலைமையில் நடந்த விசாரணை அறிக்கையில், காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் தினமும் தானாகவே அழியும் வகையில் வைக்கப்பட்டுள்ளது. 1TB ஹார்டு டிஸ்க்கில், போதுமான அளவு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருந்தும், தானாக அழியும் வகையில் செட் செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவங்களை நேரில் பார்த்த காவலர் விளக்கம் அளித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தந்தை, மகன் இருவரும் லத்தியால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், லத்தியும், மேஜையும் ரத்தம் படிந்திருந்ததாக காவலர் ரேவதி மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளார். 

அவர் என்னை அந்த லத்தியையும், மேஜையையும் கைப்பற்றும் படி வலியுறுத்தினார். ஆனால், அங்கிருந்து காவலர்கள் எனக்கு அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இதில், ஒரு காவலரிடம் அவரது லத்தியை ஒப்படைக்கும்படி கேட்ட போது, அவர் காவல் நிலையத்தின் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றுவிட்டார்.

மற்றொரு காவலரான மகாராஜன், அவரது லத்தி சொந்த ஊரில் உள்ளதாக தெரிவித்துள்ளார். பின்னர், அந்த வாக்குமூலத்தை மாற்றி தனது காவலர் குடியிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த காவலர்கள் இந்த சம்பவங்களை தங்களது மொபைல் போன்களில் பதிவு செய்து நீதிமன்ற ஊழியர்களை மிரட்டுகின்றனர். அதனால் நிலைமை எங்களுக்கு பாதுகாப்பானதாக இல்லாததால், நாங்கள் உடனடியாக அங்கிருந்து திரும்பினோம் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, பிரேத பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், துணை காவல் கண்காணிப்பாளர் சி.பிரதாபன், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் காவலர் மகாராஜன் உள்ளிட்ட 3 காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது. 

இந்த விசாரணையின் போது காவலர் மகாராஜன், உன்னால் எங்களை ஒன்னும் புடுங்க முடியாது என்று தெரிவித்துள்ளார். 

காவலர்கள் தரப்பில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் தங்களை தகாதா வார்த்தைகளில் திட்டியதாகவும், கைது செய்ய முயற்சித்த போது சாலையில் படுத்து உருண்டதாகவும் தெரிவித்துள்ளனர். 

ஜூன்.22ம் தேதி இரவு 7.45மணிக்கு பென்னிக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அன்றிரவு 9 மணி அளவில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவரது தந்தை ஜெயராஜ் அதேநாள் இரவு 10.30 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அடுத்த நாள் காலை 5.40 மணி அளவில் அவர் உயிரிழந்ததாகவும் காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து, மாநில அரசு இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது 

.