This Article is From Mar 18, 2020

“தூக்கு தண்டனைக்கு முன் விவாகரத்து கொடுங்க…”- நீதிமன்றத்தை நாடிய நிர்பயா குற்றவாளியின் மனைவி!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் சிங் (32), பவண் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

“தூக்கு தண்டனைக்கு முன் விவாகரத்து கொடுங்க…”- நீதிமன்றத்தை நாடிய நிர்பயா குற்றவாளியின் மனைவி!

வரும் 20 ஆம் தேதி அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது

ஹைலைட்ஸ்

  • வரும் 20 ஆம் தேதி தூக்கு தண்டனைக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது
  • இதுவரை இரு முறை தூக்கு தண்டனை தள்ளிப் போயிருக்கிறது
  • இந்த முறை தண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புகள் அதிகம்
New Delhi:

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி, பிகார் நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், “என் கணவரை தூக்கில் போடுவதற்கு முன்னர் எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார். பிகாரின் அவுரங்காபாத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி புனிதா, தாக்கல் செய்துள்ள மனுவில் மேலும், “வரும் மார்ச் 20 ஆம் தேதி எனது கணவர் தூக்கிலிடப்பட உள்ளார். ஒரு விதவையாக எனக்கு வாழ விருப்பமில்லை,” என்றுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரும் 19 ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது. 

இந்த வழக்கு தாக்கல் செய்தது குறித்து புனிதா, “எனது கணவர் நிரபராதி. அவருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் சட்டப்பூர்வமாக விவாகரத்து வாங்க வேண்டும் என நினைக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார். 

புனிதாவின் வழக்கறிஞரான முகேஷ் குமார் சிங், செய்தியாளர்களிடம் பேசியபோது, “எனது கட்சிக்காரர், அவரது கணவரிடமிருந்து விவாகரத்து வாங்க உரிமையுள்ளது. அதனால்தான், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். இந்து திருமணச் சட்டத்திற்குக் கீழ் அவருக்கு விவாகரத்து வாங்க அனைத்து உரிமைகளும் உள்ளன,” என்று கூறியுள்ளார். 

இந்த வழக்கின் தன்மை குறித்து டெல்லி நீதிமன்றத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர், திஸ் ஹசாரி, “தன் கணவர் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவரின் மனைவிக்கு விவாகரத்து வாங்குவதற்கான உரிமையுள்ளது,” என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெளிவுபடுத்தியுள்ளார். 

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளான முகேஷ் சிங் (32), பவண் குப்தா (25), வினய் ஷர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வரும் 20 ஆம் தேதி அவர்களுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. தண்டனை நிறைவேற்றத்தைத் தள்ளிப்போடக் குற்றவாளிகள் தொடர்ந்து பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். இதுவரை தூக்கு தண்டனை இரு முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தூக்கு தண்டனையை ரத்து செய்ய அவர்கள் சர்வதேச நீதிமன்றம் மற்றும் இந்திய மனித உரிமைகள் ஆணையத்தையும் அணுகியுள்ளனர். 

அதே நேரத்தில், இனியும் குற்றவாளிகளால் தண்டனையைத் தள்ளிப்போட முடியாது என்றும், அவர்களுக்கு இருந்த அனைத்து சட்டப்பூர்வமான மேல்முறையீட்டு நடவடிக்கைகளும் தீர்ந்துவிட்டதாகத் தெரிவிக்கின்றனர் சட்ட வல்லுநர்கள் சிலர். 

.