This Article is From Sep 14, 2020

இன்று நீட் தேர்வு: தேர்வு பயத்தால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வது வேதனையளிப்பதாக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.

இன்று நீட் தேர்வு: தேர்வு பயத்தால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!
Chennai:

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. நீட் தேர்வு பயத்தால், தமிழகத்தில் ஒரே வாரத்தில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு எழுதினால் தான் மருத்துவப்படிப்பில் சேர்ந்து மருத்துவராக முடியும் என்ற நிலை உள்ளது. இதனால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் பள்ளிப்படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றாலும், நீட் தேர்வில் மதிப்பெண் பெறமுடியாததால் பல மாணவர்களு தங்களது மருத்துவராகும் கனவு கனவாகவே போகிறது. 

மேலும், நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இரவுபகல் பாராமல் கடிமனமாக தயாராகி வருகின்றனர். பெற்றோர்கள், உற்றார் உறவினரும் தங்கள் பிள்ளைகள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்து விடுவார்கள் என்ற முழுநம்பிக்கை வைக்கின்றனர். ஆனால், இந்த நம்பிக்கையோ மாணவர்கள் மனிதில் பயத்தை ஏற்படுத்தி, நம்பிக்கையை காப்பாற்ற முடியாமல் போய்விடுவோமா என்ற பயத்திலேயே துவண்டு, தற்கொலை முடிவுகளை எடுக்கின்றனர். 

தமிழகத்தில் நேற்று (செப்.12) ஒரே நாளில் மூன்று மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்தனர்.  தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிஸ்ரீ ஆகியோர் ஏற்கனவே கடந்தாண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாமல் போயினர். இந்தாண்டு நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற முனைப்பில் படித்து வந்தனர். ஆனால், நீட் தேர்வில் இந்தாண்டும் தோல்வியடைந்து விடுவோமா என்ற பயத்தில் தற்கொலை செய்து கொண்டனர். 

இதற்கு முன்பு சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் என்ற மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு தமிழகத்தில் நீட் தேர்வு பயத்தால் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வது வேதனையளிப்பதாக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார். நீட் என்பது தேர்வும் அல்ல, தற்கொலை என்பது தீர்வும் அல்ல என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  மேலும், பல அரசியல் கட்சி தலைவர்களும் தற்கொலை செய்த மாணவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். 
 

.