This Article is From Jan 30, 2020

முரசொலி மூலப் பத்திரம்: வெற்றுச் சவடால் தானா? மீண்டும் ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்!

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?

முரசொலி மூலப் பத்திரம்: வெற்றுச் சவடால் தானா? மீண்டும் ஸ்டாலினை சீண்டும் ராமதாஸ்!

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... ராமதாஸ் கிண்டல்

முரசொலி மூலப்பத்திரம் விவகாரத்தில் சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா? என மு.க.ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் சீண்டியுள்ளார். 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான, முரசொலியின் அலுவலகம் இருக்குமிடம், ஒரு பஞ்சமி நிலம் என சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போதே மறுத்து கண்டனம் தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக தரப்பில் டெல்லியில் உள்ள ஆதி திராவிடர்களுக்கான தேசிய ஆணையத்தில், முரசொலி விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புகார் தொடர்பாக, விசாரித்து வரும் தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில், திமுக தரப்பு அது வாடகைக் கட்டிடத்தில் இருக்கிறது என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, "முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?

அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசிவிட்டு, இப்போது நாங்களே வாடகைக்குத்தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்ததுதான்.

முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?

அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்துகொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது" என்று ராமதாஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

.