This Article is From May 13, 2020

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க புதிய ஏற்பாடு: முக்கிய தகவல்!

இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து, ரூ.20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு குறித்தான விரிவான திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்க உள்ளார்

சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க புதிய ஏற்பாடு: முக்கிய தகவல்!

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் சுமார் 20 சதவீதம் கூடுதல் கடன் வாங்க தகுதி பெறலாம் என்றும் தகவல் சொல்லப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • பிரதமர் மோடி, நேற்றிரவு 8 மணி அளவில் உரையாற்றினார்
  • தனது உரையின்பொது பொருளாதாரத்தை மேம்படுத்த அறிவிப்புகள் வெளியிட்டார் மோடி
  • இன்று அது குறித்து விளக்க உள்ளார் நிதி அமைச்சர் நிர்மலா
New Delhi:

50 நாட்களாக கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப் போயுள்ள நிலையில், அதை மீட்டெடுக்க மத்திய அரசு இன்று பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறிய நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிடலாம் என்று தகவல் வந்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, நிவாரணப் பணிகள், பொது முடக்கம் குறித்து நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு உரையாற்றினார். 

அப்போது, கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். 

அவர் மேலும், கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் இழப்பை சரி செய்ய பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவிக்க உள்ளேன். 'ஆத்மனிர்பார் பாரத் அபியான்' என்ற இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ. 20 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்படும். இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் ஆகும் என்று கூறினார். 

மத்திய அரசு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒர் ஆண்டு வட்டியில்லா கடன் கொடுக்கவும் பரிசீலித்து வருவதாக சொல்லப்படுகிறது. 

நாட்டில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் சுமார் 20 சதவீதம் கூடுதல் கடன் வாங்க தகுதி பெறலாம் என்றும் தகவல் சொல்லப்படுகிறது. 

அதேபோல, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணியாளர்களுக்கு, ஊழியர்கள் மாநில காப்பீட்டு நிதியிலிருந்து (ESIC) ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை சம்பளம் கொடுக்கப்படலாம். தற்போது ESIC-யில் 31,000 கோடி ரூபாய் நிதி உள்ளது. மேலும், 30,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஊழியர்களின் பி.எஃப் தொகையை குறுகிய காலத்திற்கு அரசே கொடுக்கும் எனவும் தெரிகிறது.

இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து, ரூ.20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு குறித்தான விரிவான திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவிக்க உள்ளார். அப்போதுதான் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரியவரும். 


 

.