This Article is From Aug 28, 2018

தி.மு.க தலைவரானார் மு.க.ஸ்டாலின்

ஆகஸ்டு 28 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது

தி.மு.க தலைவரானார் மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின். இன்று அண்ணா அறிவாலயத்தில் நடந்த அக்கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில், பொதுச் செயலாளர் க.அன்பழகன், ஸ்டாலினை தலைவராக அறிவித்தார்.1307 பேர் ஸ்டாலினை தலைவராக முன்மொழிந்ததாக க.அன்பழகன் தெரிவித்தார்.

முன்னதாக ஸ்டாலினை செயல் தலைவராக்க உதவிய விதி பிரிவு 4, நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

கட்சியின் பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் துரை முருகன். மேலும் 80 ஆண்டுகள் பொதுச் சேவையில் ஈடுபட்டு, 5 முறை தமிழக முதல்வராக இருந்த தி.மு.கவின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

உடல் நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் 7 ஆம் தேதி, திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தினார். அதன் பின்னர், திமுகவின் அவசர செயற்குழு கூட்டம், ஆகஸ்டு 14 ஆம் தேதி நடைபெற்றது. திமுக தலைவர் தேர்தல் குறித்து அந்த கூட்டத்தில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து மட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, ஆகஸ்டு 28 ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இன்று காலை 10 மணி அளவில், திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, திமுக தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலின் மனுத் தாக்கல் செய்தார். அதேபோல பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். இவர்கள் இருவரும் இன்று நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒரு மனதாக பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

.