This Article is From Nov 28, 2018

விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு, அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது

விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திமுக அழைப்பு!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில், கர்நாடக அரசு, அணை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து விவாதிக்க தமிழக எதிர்கட்சியான திமுக, நாளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘தமிழக விவசாயத்திற்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப் பெரிய பாதிப்பை உருவாக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 29.11.2018 அன்று, காலை 10:30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் ‘அனைத்துக் கட்சிக் கூட்டம்' நடைபெறும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

8d2q2f9o

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா வெகு நாட்களாக முயன்று வருகிறது. இந்தத் திட்டத்துக்குத் தமிழக அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், திட்டத்துக்கான விரிவான ஆய்வறிக்கையைத் தயாரிக்க கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில், ‘மத்திய நீர் மேலாண்மை கமிஷன், தமிழகத்தின் நியாயமான காரணங்களுக்கு செவி மடுக்காமல், கர்நாடகாவுக்கு மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் அனுமதி கொடுத்துள்ளது. இந்த முடிவு, காவிரியை நம்பியுள்ள பல லட்சம் தமிழக மக்களையும் விவசாயிகளையும் வெகுவாக பாதிக்கும்.

எனவே, விரிவான திட்ட ஆய்வறிக்கையை தயாரிக்க கர்நாடகாவுக்கு கொடுத்த உத்தரவை உடனடியாக திரும்ப பெறும் வகையில் நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

.