வேலூர் மக்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இரு கட்சிகளும் ஏற்கனவே போட்டியிட்ட அதே வேட்பாளர்களையே அறிவித்துள்ளது.

வேலூர் மக்களவைத் தேர்தல்: திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில், வேலூர் தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட காரணத்தால், அங்கு தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தேர்தலில், பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்தது.

முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பாக அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அந்த தொகுதியில் வாக்களர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கப்பட்டதாக வந்த தகவலை தொடர்ந்து, துரை முருகன் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

இதில் ரூ.11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துரைமுருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பணம் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதன் தொடர்ச்சியாக வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

பின்னர், வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலின் போது, நாட்டிலேயே வேலூர் தொகுதி தேர்தல் மட்டுமே ரத்து செய்யப்பட்டது. 

இந்தச் சூழ்நிலையில், பணப் பட்டுவாடா விவகாரத்தால் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 

இதன்படி, ஜூலை 11-ல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. தொடர்ந்து, ஜூலை 18 வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். ஜூலை 19ல் வேட்புமனு பரிசீலனை செய்யப்படும். ஜூலை 22, வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். ஆகஸ்ட் 5-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில், இத்தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் டி.எம்.கதிர் ஆனந்த் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் மீண்டும் போட்டியிடுகிறார்.