This Article is From Apr 10, 2019

சென்னையில் தண்ணீர் பிரச்னைக்கு என்ன தீர்வு? வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கேள்வி!!

சென்னையில் கடந்த 2015-ல் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதன்பின்னர் 4 ஆண்டுகள் கடந்த பின்னரும் தண்ணீரை சேமித்து வைக்க வழியில்லாத நிலையே நீடிக்கிறது.

சென்னையில் தண்ணீர் பிரச்னைக்கு என்ன தீர்வு? வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கேள்வி!!

கோடை காலம் வந்துள்ள நிலையில் சென்னை தொகுதிகளில் தண்ணீர் பிரச்னை இந்த தேர்தலில் முக்கிய பிரச்னையாக எழுந்துள்ளது.

Chennai:

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத்தில் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில், சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு இந்த தேர்தலில் முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கும். சென்னையை பொறுத்தளவில் பருவமழை 54 சதவீதம் குறைந்து விட்டதால் ஏற்கனவே தண்ணீர் பிரச்னை உள்ளது. 

இதற்கிடையே சென்னையின் தண்ணீர் ஆதாரங்கள் வற்றி வருவதும், குடிநீர் பிரச்னையை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலையில் மக்களவை தேர்தல் வருவதால், தண்ணீர் பிரச்னைக்கு என்ன தீர்வு வைத்துள்ளீர்கள் என்று சென்னை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் கேள்வியை முன் வைத்துள்ளனர். 

தென் சென்னை வேட்பாளர்களிடம் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பாக முறையான குடிநீர் வழங்கக் கோரி மனுக்களை அளித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ. 1,200-யை தண்ணீர் வரியாக செலுத்துகின்றனர். ஆனால் மாநகராட்சியில் முறையான சேவை வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. தண்ணீருக்கு மட்டும் ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் வரையில் செலவு செய்வதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தென்சென்னையை சேர்ந்த பிரபா ஹோடா என்பவர் கூறுகையில், 'எங்களது பணத்தை அவர்கள் வெளிப்படையாகவே கொள்ளையடிக்கின்றனர்' என்று குற்றம் சாட்டியுள்ளார். ராகேஷ் ஓரி என்பவர் கூறுகையில், 'கடமையை செய்ய தவறி விட்டு இப்போது  தைரியத்துடன் வாக்கு கேட்க வந்து விட்டார்கள்' என்று வேட்பாளர்களை விமர்சித்துள்ளார். 

மோகன் தாஸ் என்பவர், 'தண்ணீர் பிரச்னை என்பது இப்போது முக்கியான பிரச்னையாக உள்ளது' என்றார். 2015-ல் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்டது. இதற்கு பின்னர் தண்ணீரை சேமித்து வைப்பதற்கான முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. 

சென்னை குடிநீர் பிரச்னை குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், 'தண்ணீர் இலவசமாக வழங்கப்பட்டால் அது பெண்கள் பலரும் வேலைக்கு செல்வதற்கு உபயோகமாக இருக்கும். 60 ஆயிரம் குடங்கள் தண்ணீர் வழங்கப்படும்போது அது பலருக்கு வேலை வாய்ப்பை கொடுக்கும்' என்றார். 

தென் சென்னை தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் கூறுகையில், 'கூடுதலாக நீர்ப்பிடிப்பு நிலையங்கள் அமைப்பதற்கு நான் முயற்சி மேற்கொண்டு வருகிறேன்' என்றார்.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப் பாண்டியன் கூறுகையில், 'திமுக தலைவர் கருணாநிதிதான் 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தார். ஆனால் அதிமுக அதனை விரிவாக்கம் செய்யவில்லை. ஸ்டாலின் முதல்வர் ஆகும்போது தண்ணீர் பிரச்னைக்கு இன்னும் முழுவீச்சில் தீர்வு காண்போம்' என்றார். 

.