This Article is From Feb 11, 2019

கட்சிப் பொறுப்பேற்ற பின்னர் ராகுலுடன் இன்று உத்தர பிரதேசம் செல்கிறார் பிரியங்கா

பிரியங்காவுடன் உத்தர பிரதேச மேற்கு மண்டலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜியோதிராதித்ய சிந்தியா மற்றும் முக்கிய நிர்வாகிகள் செல்கின்றனர்.

லக்னோவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுலும், பிரியங்காவும் பங்கேற்கின்றனர்.

ஹைலைட்ஸ்

  • காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் உத்தர பிரதேசம் செல்கிறார் பிரியங்கா
  • ஜியோதிராதித்ய சிந்தியாவும் ராகுல், பிரியங்கா உடன் செல்கிறார்
  • தேர்தல் குறித்து 3 தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்
Lucknow:

காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு ஏற்ற பின்னர், ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்கிறார். அவருடன் உத்தர பிரதேசத்தின் மேற்கு மண்டல காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ஜியோதிராதித்ய சிந்தியாவும் உத்தர பிரதேசம் செல்கின்றனர்.

லக்னோவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் இருவரும் பங்கேற்கின்றனர். பிரியங்காவின் வருகை உத்தர பிரதேச காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து நேற்று பிரியங்கா அளித்த பேட்டியில், ''உத்தர பிரதேசத்தில் புதிய அரசியலை ஆரம்பிக்கப் போகிறோம். அது இளைஞர்களுக்கான, சகோதர சகோதரிகள் மற்றும் ஏழைகளுக்கான அரசியலாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

பிரியங்காவின் வருகையை முன்னிட்டு உத்தர பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கிறது. விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று தலைவர்களும் செல்லவுள்ளனர்.

3gpagsb8

வழி நெடுகில் அமைந்துள்ள மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு பிரியங்கா காந்தியும், ராகுலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். கட்சி அலுவலகத்திற்கு சென்ற பின்னர் பிரியங்கா காந்தி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். தேர்தல் வரவிருக்கும் நிலையில் கட்சி அலுவலகத்தில் புதிதாக ஊடக மையம் திறக்கப்பட்டுள்ளது.

லக்னோ பயணத்தை முடித்துக் கொண்டு பிரியங்கா காந்தி கிழக்கு உத்தர பிரதேச பகுதிக்கு செல்வார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜும் காங்கிரசை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டுள்ள நிலையில் அங்கு பிரியங்கா காந்திக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

.