This Article is From Apr 18, 2019

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்த விஜயகாந்த்!

Lok Sabha Elections: சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வந்து வாக்களித்த விஜயகாந்த்!

Lok Sabha Elections 2019: மக்களவைக்கு 2-வது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் புதுவையில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்குமான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு சரியாக வாக்குப்பதிவு தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் மக்கள் காலை 6.30 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இதேபோல், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் காலை முதலே தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அவர்களுடன் அவரது மகன் விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் ஆகியோரும் வாக்களித்தனர்.

அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா கூறும்போது, நாளை நமதே நாற்பதும் நமதே என்று சொல்லக்கூடிய அளவு 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. 18 தொகுதி இடைத்தேர்தலிலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு விருதுநகர், சென்னை வடக்கு, திருச்சி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

.