This Article is From Oct 08, 2019

Lalithaa Jewellery theft: 3வது நபர் கைது; முக்கிய குற்றவாளிகள் தொடர்ந்து தலைமறைவு- அடுத்து என்ன?

Lalithaa Jewellery theft: முதலில் பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என போலீஸார் கூறினர்

Lalithaa Jewellery theft: 3வது நபர் கைது; முக்கிய குற்றவாளிகள் தொடர்ந்து தலைமறைவு- அடுத்து என்ன?

Lalithaa Jewellery theft: மணிகண்டன் வைத்திருந்த நகைகளின் பார்கோடுகளை சோதனையிட்ட போது, லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் முத்திரைகள் இருந்தன

திருச்சி (Tiruchy), லலிதா ஜுவல்லரி (Lalithaa Jewellery) நகைக் கடை கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகப்பட்டு இதுவரை மணிகண்டன் மற்றும் கனகவல்லி ஆகிய இருவரை கைது செய்திருந்தது தமிழக காவல் துறை. தற்போது முரளி என்னும் மூன்றாவது நபரை போலீஸ் கைது செய்திருப்பதாக தெரிகிறது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் திருவாரூரைச் சேர்ந்த முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பரபரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன.

திருச்சியில் (Tiruchy) உள்ள லலிதா ஜுவல்லரி (Lalithaa Jewellery) ஷோரூமில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் (Theft) சென்றுள்ளது ஒரு கும்பல். சம்பவத்தின் போது கொள்ளையர்கள் புலி மற்றும் காளை போன்ற முகமூடிகளை (Masks) அணிந்து திருடியுள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை இரவு முகமூடி கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லாரி ஷோரூமின் ஒருபக்க சுவரை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள சுமார் 800 நகைகளை திருடிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 13 கோடி ரூபாயாகும். ஷோரூமுக்கு 6 இரவு நேரக் காவாளிகள் இருந்தபோதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கடைக்குள் அவர்கள் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் திருவாரூர் அருகே நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேரை போலீசார் மடக்கினர். அதில் ஒருவர் தப்பியோடினார். மற்றொருவரை போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த அட்டை பெட்டிகளை போலீசார் சோதனையிட்டபோது அதில் நகைகள் சில இருந்தன. 

அந்த நகைகளின் பார்கோடுகளை சோதனையிட்ட போது, லலிதா ஜூவல்லரி நகைக்கடையின் முத்திரைகள் இருந்தன. இதனால் அவர்கள் திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர். இதில் அவர் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபரிடம் மொத்தம் 5 கிலோ எடை அளவில் நகைகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (32) என போலீஸார் கூறினர். தப்பியோடிய நபர் திருவாரூர் ஒட்டன் ரோட்டைச் சேர்ந்த சுரே‌‌ஷ் (28) என்றும், அவர் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருச்சி போலீஸார் திருவாரூர் விரைந்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அவர் விசாரணையின்போது, திருடப்பட்ட மீதமிருக்கும் நகைகள் மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பிறரும் எங்கு உள்ளனர் என்பது குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸ், அந்த இடத்திற்கு விரைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. 

மணிகண்டன் சிக்கிய பின்னர் சுரேஷின் தாயார் கனகவல்லியைக் கைது செய்தது போலீஸ். அதைத் தொடர்ந்து, மொத்த கொள்ளைக்கும் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் முருகனின் உறவினரான முரளியையும் போலீஸ் செய்துள்ளதாக நமக்குத் தகவல் வந்துள்ளது. தொடர்ந்து அனைவர் இடத்திலும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்தும், திருடப்பட்ட நகைகள் குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த மூவரைத் தவிர வேறு சிலரையும் காவல் துறை தரப்பு, ரகசியமாக கைது செய்து விசாரித்து வருகிறார்கள் என்றும் ஒரு தகவல் உலவுகிறது. கொள்ளை நடந்த ஒரு வாரத்திற்குள் மூவரை கைது செய்திருந்தபோதும், திருட்டில் ஈடுபட்ட முக்கிய நபர்கள் இன்னும் பிடிபடாதது காவல் துறைக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது. அடுத்து வரும் நாட்களில் கொள்ளை குறித்த பல அதிர்ச்சி ரகத் தகவல்கள் வரலாம் என்று தகவல் தெரிந்த வட்டாரம் கூறுகின்றது. 

.