This Article is From Aug 07, 2018

பில்லி சூனியம்: கேரளாவில் மூடநம்பிக்கையால் நால்வரைக் கொன்று புதைத்த கொடூரம்

வீட்டுக்குச் சென்றபோது சுவரில் இரத்தகறைகளைப் பார்த்த உறவினர், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி.

பில்லி சூனியம்: கேரளாவில் மூடநம்பிக்கையால் நால்வரைக் கொன்று புதைத்த கொடூரம்
Thiruvananthapuram:

கொலை செய்யப்பட்டு ஒரு வாரத்துக்குப் பிறகு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் வீட்டின் பின்புறத்தில் உள்ள குழியில் இருந்து கண்டுபிடிப்பு. தொடுபுழாவில் உள்ள ரப்பர் தோட்ட உரிமையாளரான கிருஷ்ணன் (52), அவரது மனைவி சுசீலா (50), மகள் அர்ஷா (21), மகன் அர்ஜுன் (19) ஆகியோரைக் கடந்த மாதம் இறுதியில் இருந்து காணவில்லை.

காணாமல் போய் நான்கு நாட்களான நிலையில் அக்கம்பக்கத்தினர் போலிசுக்குத் தகவல் கொடுத்தனர். வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சுவரில் இரத்தகறைகளைக் கண்ட உறவினர், அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி. அங்கு சுத்தி, கத்தி ஆகியவற்றையும் கண்டெடுத்த போலிசார் கொலையில் பில்லிசூனியம் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என சந்தேகித்தனர்.

தற்போது காவல்துறை தெரிவிக்கும் கருத்துப்படி, “இக்கொலையில் முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டவரான அனீஷ் பில்லி சூனியத்தில் பயிற்சி பெற்றவர் ஆவார். கடந்த சில மாதங்களாக தனது மாந்த்ரீக சக்திகள் செயல்படவில்லை என்ற கவலையில் அவர் இருந்தார். அவரது குரு கிருஷ்ணன்தான் இவரது சக்திகளைத் திரும்ப எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என்று அஞ்சினார். இதனால் லிஜின் என்பவரை உடந்தையாக வைத்துக்கொண்டு கிருஷ்ணனைக் கொலை செய்து தனது சக்திகளை மீட்க கடந்த ஆறு மாதங்களாக திட்டம் தீட்டி வந்துள்ளார்”.

இதில் அனீஷ் தலைமறைவாகிவிட்டார். லிஜின் கைதுசெய்யப்பட்டதோடு குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலை நடந்த விதம்:

“ஜூலை 29ஆம் தேதி இரவு அனீஷும் லிஜினும் கிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். முதலில் ஃபியூசைப் பிடுங்கி வீட்டின் மின்சாரத்தைத் துண்டித்துள்ளனர். ஆடுகளின் குரலும் தொழுவத்தில் எழுந்த சத்தத்தாலும் கிருஷ்ணன் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது அவரை இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனர். கணவரைத் தேடி வந்த மனைவியையும் தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்களது மகன், மகளையும் கொன்றுள்ளனர். உடல்களை வீட்டினுள் போட்டுவிட்டு வெளியேறிவிட்டனர். இதையடுத்து மறுநாள் இரவு பதினொரு மணிக்கு இருவரும் மீண்டும் வந்து பார்த்தபோது கிருஷ்ணனின் மகன் அர்ஜுன் இன்னும் உயிருடன் இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். கூர்மையான ஆயுதம் ஒன்றால் அவரைக் குத்தி, பின்னர் சுத்தியால் அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் குழி ஒன்றினைத் தோண்டி நால்வரையும் புதைத்துள்ளனர்” என்று கொலைச்சம்பவத்தை விவரிக்கிறார் இடுக்கி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் கே.பி. வேணுகோபால்.

மேலும் அவ்வீட்டின் குப்பைத்தொட்டியிலிருந்து மதச்சின்னங்களைக் காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளையும் மீட்டனர். கொலைக்கூட்டாளி லிஜின் அளித்த வாக்குமூலத்தின்படி, நால்வரையும் கொலைசெய்து புதைத்த பின்னர், கைதாவதில் இருந்து தப்பிக்க, சேவலை பலி கொடுத்து அனீஷ் பரிகாரப் பூஜை நடத்தியுள்ளான்.

 
.