This Article is From May 13, 2019

துணை பிரதமர் கனவில் தெலங்கானா முதல்வர் : ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் சந்திப்பின் பின்னணி!!

மாநில கட்சிகளை ஒன்றிணைத்து அடுத்து ஆட்சியை பிடிக்கும் கூட்டணியிடம் முக்கிய வலியுறுத்தவை வைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர ராவ் இறங்கியுள்ளார்.

ஒரு மணிநேரமாக ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் சந்திப்பு நீடித்தது.

Chennai:

மாநில கட்சி தலைவர்கள், முதல்வர்களை சந்தித்து வரும் தெலங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திர சேகர ராவ், இன்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஒரு மணிநேரமாக ஆலோசனை நடத்தினார். 

இந்த சந்திப்பின்போது துணை பிரதமர் ஆகும் விருப்பத்தை ஸ்டாலினிடம் சந்திர சேகர ராவ் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு அணியை ஏற்படுத்தி, அதன் மூலம் அடுத்ததாக ஆட்சியை அமைக்கும் கூட்டணியிடம் ஒரு கோரிக்கையை வைக்கலாம் என்ற திட்டத்தில் சந்திர சேகர ராவ் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதன்படி, துணை பிரதமர் ஆகலாம் என்ற திட்டமும் ராவ் வசம் இருப்பதாக தெரிகிறது. இதற்காகத்தான் அவர் மாநில கட்சி தலைவர்களை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் 39, மேற்கு வங்கத்தில் 42, தெலங்கானாவில் 17, ஆந்திராவில் 25, கேரளாவில் 20, உத்தர பிரதேசத்தில் 80 என சுமார் 200 தொகுதிகள் இந்த மாநிலங்களில் இருக்கின்றன. இந்த மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு பெற்று விட்டால் அதன் மூலம் அடுத்து ஆட்சியை அமைக்கும் கூட்டணியிடம் வலுவான கோரிக்கையை வைக்கலாம் என ராவ் தரப்பு கருதுவதாக தெரிகிறது. 

இருப்பினும் சந்திர சேகர ராவிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்கும்படி ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். சுமார் ஒரு மணிநேரம் நீடித்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் விறு விறுவென சந்திர சேகர ராவ் நடையை கட்டியுள்ளார். 

தெலங்கானா முதல்வரின் முயற்சிக்கு மேற்கு வங்கத்தை தவிர்த்து மற்ற எந்த மாநில கட்சி தலைவர்களும் பாசிட்டிவான பதிலை அளிக்கவில்லை. இதனால் ராவின் முயற்சி பெரிய அளவில் பலன் அளிக்காது என்று கூறப்படுகிறது. 

.