கர்நாடகா இடைத் தேர்தல்: 5-ல் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது காங்., - மஜத கூட்டணி!

கர்நாடகாவில் கடந்த 3 ஆம் தேதி 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது

இடைத் தேர்தல்களின் முடிவுகள் அடுத்து வரவுள்ள லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Bengaluru:

கர்நாடகாவில் கடந்த 3 ஆம் தேதி 3 லோக்சபா தொகுதிகளுக்கும், 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்தது. இதில் 2 லோக்சபா தொகுதியிலும், 2 சட்டமன்ற தொகுதியிலும் காங்கிரஸ் - மதச்சாரப்ற்ற ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில், இந்த முடிவு எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. 

எடியூரப்பா ராஜினாமா செய்த சிவமுகா லோக்சபா தொகுதியில் மட்டும் தான் பாஜக மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. 2004 ஆம் ஆண்டு முதல் பாஜக வசமிருந்த பெல்லாரியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஆளுங்கட்சிக் கூட்டணி மாண்டியா லோக்சபா தொகுதியிலும், ஜமகண்டி மற்றும் ராமநகரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி கண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வந்தது. ஆனால், காங்கிரஸ் மற்றும் மஜத, கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. இதனால் பாஜக-வுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தற்போது இடைத் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளிடம் பாஜக தோல்வியடைந்துள்ளது.

Newsbeep

இது குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்:

  1. 'இடைத் தேர்தல் வெற்றியின் மூலம் எங்களுக்கு மேலும் உத்வேகம் கிடைத்துள்ளது. காங்கிரஸுடன் எங்கள் கூட்டணி, குறுகிய காலம் தான் இருக்கும் என்று பாஜக தொடர்ந்து சொல்லி வந்ததற்கு இந்தத் தேர்தல் முடிவுகள் சிறந்த பதிலடியாக இருக்கிறது' என்று வெற்றி குறித்து முதல்வர் குமாரசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
  2. பெல்லாரி லோக்சபா தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் உகரப்பா, பாஜக-வின் சாந்தாவை 2.43 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் பாஜக வசம் தான் பெல்லாரி இருந்தது குறிப்பிடத்தக்கது.
  3. மாண்டியா லோக்சபா தொகுதியில், மஜத-வின் வேட்பாளர் சிவராமே கவுடா, பாஜக-வின் சித்தராமையாவை 3.24 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
  4. தேர்தல் வெற்றி குறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா, ‘மக்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்றால் இது தான் நடக்கும். கர்நாடக மக்கள் கொடுத்தத் தீர்ப்பை மதிக்காமல் ஆணவத்துடன் இருந்ததால் மாநில பாஜக-வுக்கு அவர்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்' என்று ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
  5. பாஜக-வின் ராகவேந்திரா, மஜத-வின் மது பங்காரப்பாவை சிவமுகா லோக்சபா தொகுதியில் 52,148 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். ராகவேந்திரா, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ஆவார்.
  6. பெல்லாரி தொகுதியில் காங்கிரஸின் பிரசாரத்துக்கு தலைமை வகித்த சிவக்குமார், ‘கடந்த 15 ஆண்டுகளாக பெல்லாரியில் பாஜக ஒன்றுமே செய்யவில்லை. இதனால் தான் அவர்கள் ஆத்திரமடைந்து, காங்கிரஸை தேர்வு செய்துள்ளனர்' என்று கூறியுள்ளார்.
  7. கர்நாடக துணை முதல்வர் பரமேஷ்வரா, ‘இப்படிப்பட்ட மாபெரும் வெற்றியைத் தந்ததற்கு கர்நாடக மக்களுக்கு நன்றி. மஜத கட்சியைச் சேர்ந்த தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன். காங்கிரஸினருக்கு தீபாவளி வாழ்த்துகள்' என்று உற்சாகமாக ட்வீட் செய்துள்ளார்.
  8. ராமநகரா தொகுதியைப் பொறுத்தவரை, முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, பாஜக-வின் சந்திரசேகரை 1.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார்.
  9. ஜம்காண்டி தொகுதியில், காங்கிரஸின் ஆனந்த் சித்து நியாமகவுடா, பாஜக-வின் ஸ்ரீகாந்த் குல்கர்னியை 39,480 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்துள்ளார்.
  10. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து சிவக்குமார், ‘இந்த தீபாவளியன்று கர்நாடக மக்களுக்கு, குறிப்பாக பெல்லாரி மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவுடனும், முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் வழிகாட்டுதலுடனும் பாஜக-வை நாங்கள் வீழ்த்தியுள்ளோம்' என்று ட்வீட்டியுள்ளார்.