This Article is From Aug 02, 2018

ஆப்கானிஸ்தானில் இந்தியர் உட்பட 3 பேர் கடத்திக் கொலை!

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், 3 வெளிநாட்டினரை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்துள்ளனர். மூவரில் ஒருவர் இந்தியர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஆப்கானிஸ்தானில் இந்தியர் உட்பட 3 பேர் கடத்திக் கொலை!
Kabul:

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில், 3 வெளிநாட்டினரை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்துள்ளனர். மூவரில் ஒருவர் இந்தியர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்டுள்ள மூவரும் ‘சொடெக்சோ’ பன்னாட்டு நிறுவனத்தில் சமையல்காரர்களாக வேலை செய்து வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்டவரில் ஒருவர் இந்தியர் (39 வயது) என்றும் மற்ற இருவர் மலேசியா (64 வயது) மற்றும் மெகடோனியா (37 வயது) நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. தங்களது பணி நிமித்தமாக மூன்று பேரும் காபூலின் கிழக்குப் பகுதியிலிருந்து கார் மூலம் பயணப்பட்டுள்ளனர். அப்போது புல்-இ-சக்ரி என்ற இடத்தில் அவர்கள் வழிமறிக்கப்பட்டு கடத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல் முசாஹி மாவட்டத்தில் காரின் உள்ளே கிடந்துள்ளது. 

இது குறித்து காபூல் போலீஸ் தரப்பு, ‘ஒரு இந்தியர், மலேசியர் மற்றும் மெகடோனியர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடலை மீட்டுள்ளோம். அவர்களின் அடையாளத்தை வைத்து தனிப்பட்ட தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது’ என்று கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக இதைப் போன்ற கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் அந்நாட்டில் பாதுகாப்பு குறித்து அச்சம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பணத்தைக் கேட்டு மிரட்டுவதற்காகவே ஆப்கானிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறன்றன. 

சொடெக்சோ நிறுவனம் தங்களது பணியாளர்களின் இறப்பு குறித்து இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. 
 

.