உ.பியில் 100 நாள் வேலைக்கு காத்து கிடக்கும் பட்டதாரி இளைஞர்கள்!

குமாரை போலவே பல பட்டதாரிகளும், நீர் நிலைகளை சீரமைப்பது, சாலைகளை செப்பனிடுவது போன்ற உடல் சார்ந்த உழைப்பிற்கு தயாராக உள்ளனர். இது நாட்டின் வேலையின்மையின் தீவிரத்தை காட்டுகின்றது.

நாடு முழுவதும் சுமார் 14 கோடி மக்கள் MGNREGA வேலை அட்டைகளை வைத்திருக்கிறார்கள்.

Lucknow:

ஏறத்தாழ 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா குறிப்பிட்ட அளவில் இளைஞர்களை கொண்டிருக்கின்றது. இந்நிலையில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்ட முழு முடக்க நடவடிக்கை காரணமாக பல இளைஞர்கள் வேலையிழந்து தங்கள் சொந்த கிராமங்களுக்கு திரும்பினர். டெல்லியிலிருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில், ரோஷன் குமார் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலையை தேடி வருகிறார். எம்.ஏ பட்டதாரியான குமார் தற்போது 100 நாட்கள் வேலைக்காக அலைந்து வருகிறார். உத்தர பிரதேச மாநிலத்திற்கு சுமார் 30 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்கள் திரும்பி வந்துள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்பு மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் தொழிலாளர்களும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு இணையாக வேலைக்காக முயன்று வருகின்றனர்.

“நான் முன்னர் வேலைக்கு சென்று சீரான வருமானத்தில் இருந்தேன். ஆனால், லாக்டவுன் அறிவிக்கப்பட்டவுடன் வேலை பறிபோனது. வேறு வழியின்றி சொந்த கிராமங்களுக்கு புலம் பெயர நேர்ந்தது.“ என குமார் கூறுகிறார்.

குமாரை போலவே பல பட்டதாரிகளும், நீர் நிலைகளை சீரமைப்பது, சாலைகளை செப்பனிடுவது போன்ற உடல் சார்ந்த உழைப்பிற்கு தயாராக உள்ளனர். இது நாட்டின் வேலையின்மையின் தீவிரத்தை காட்டுகின்றது.

"எனக்கு பிபிஏ பட்டம் உள்ளது, ஆனால் எனக்கு எந்த நல்ல வேலையும் கிடைக்கவில்லை. இறுதியாக, நான் ஒரு மாதத்திற்கு ரூ .6,000-7,000 மதிப்புள்ள ஒரு வேலையைச் செய்தேன், பின்னர் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த வேலையும் போய்விட்டது. தற்போது நான் மகாத்மா காந்தி  ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வருகிறேன்.“ என பிபிஏ பட்டம் பெற்ற சதேந்திர குமார் கூறுகிறார்.

இதே போல எம்.ஏ மற்றும் பி.எட் பட்டம் பெற்ற சுர்ஜித் குமார், தனக்கு இந்த வேலையை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கூறியுள்ளார்.

லாக்டவுனுக்கு முன்னர் இந்த வேலையில் சராசரியா 20 பேர்தான் இருந்தனர். ஆனால், தற்போது 100 பேருக்கும் அதிகமானோர் இருக்கின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 30 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலையை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.

லாக்டவுன் காரணமாக வேலையிழந்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கின்றனர் என ஜுனைத்பூரில் கிராமத் தலைவர் வீரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் சுமார் 14 கோடி மக்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு வருடத்தில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டுமெனில் அரசுக்கு 2.8 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும்.

“இந்த வேலையை நாடும் அனைவரும் வேலை கிடைக்க வேண்டும். அதேபோல அரசு அதற்கான நிதியினை ஒதுக்க வேண்டும்.“ என பொருளாதார வல்லுநரான ரீதிகா கெரா சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் 35 லட்சம் பேர் மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை கோரி விண்ணப்பித்துள்ளனர். இது முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.