This Article is From Jan 09, 2020

குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி JNU மாணவர்கள் பேரணி!! டெல்லியில் மீண்டும் பதற்றம்!

ஞாயிறன்று பல்கலைக் கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து மாணவர்கள் இன்று குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். 

குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி JNU மாணவர்கள் பேரணி!! டெல்லியில் மீண்டும் பதற்றம்!

நூற்றுக்கணக்கான ஜே.என்.யூ. மாணவர்கள் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்டனர்.

New Delhi:

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் ஏராளமானோர் குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் டெல்லியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஞாயிறன்று பல்கலைக் கழகத்திற்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுமார் 30 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டித்து மாணவர்கள் இன்று குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். 

பேரணியை போலீசார் தடுத்து நிறுத்தியபோது, மாணவர்கள் கோஷங்களை எழுப்பும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளனர். சில மாணவர்கள் தடுப்புகளை தாண்டி குதிக்க முயல்கின்றனர். இதற்கிடையே போலீசார், மாணவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றும் காட்சிகளையும் பேரணியின்போது பார்க்க முடிந்தது. 

மாண்டி ஹவுசில் தொடங்கிய இந்த பேரணியில் மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். முதலில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு சென்று அங்கு தங்களது கோரிக்கை தொடர்பாக மனு ஒன்றை மாணவர்கள் அளிக்கவிருந்தனர்.

இதன்பின்னர், குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்லும் என்று திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த பேரணியை கடந்த ஞாயிறன்று தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஜே.என்.யூ. மாணவர் அமைப்பின் தலைவர் அய்ஷ் கோஷ் வழி நடத்தினார். 

போலீசார் அனுமதி மறுத்ததும், அவர்களை எதிர்த்து போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கோனாட் பேலஸில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

போலீசார் மீது மாணவர்களுக்கு நம்பிக்கையற்ற நிலை உருவாகியுள்ள நிலையில் இன்றைக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. 

ஞாயிறன்று நடந்த தாக்குதலால் பாதிக்கப்ப்டடவர்கள், தாக்குதல் நடந்தபோது போலீசார் அதனை வேடிக்கை பார்த்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். முகமூடி அணிந்து வந்த ரவுடிகள் லத்தி, இரும்பு கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கினர். இதில் 19 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்கள் காயம் அடைந்தனர். 

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அளிக்கப்படவுள்ளது. 

இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மாணவர் அமைப்பு மட்டுமல்லாமல் பல்வேறு சமூக அமைப்புகள், பாலிவுட் நட்சத்திரங்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட முக்கிய கல்வி நிலையங்கள், கொல்கத்தா புனித சேவியர் கல்லூரி, டெல்லி புனித ஸ்டீபன் கல்லூரி உள்ளிட்டவற்றில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

.