This Article is From Mar 22, 2019

‘தாயின் நகையை அடகு வைத்து...’- சம்பள பாக்கியால் கண்ணீர் வடிக்கும் ஜெட் ஏர்வேஸ் விமானிகள்

சுமார் 1 பில்லியன் டாலர் கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதைத் திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறது.

பல விமானிகள் மற்ற விமான நிறுவனங்களில் பணிக்காக விண்ணப்பித்து வருவதாகவும் தெரிகிறது.

ஹைலைட்ஸ்

  • ஏப்ரல் 1 முதல் பணி செய்யமாட்டோம், ஜெட் விமானிகள்
  • மற்ற நிறுவனங்களிலும் விமானிகள் பணிக்கு விண்ணப்பித்து வருகின்றனர்
  • பல விமானங்களை ஜெட் ஏர்வேஸ் இயக்காமல் நிறுத்தி வைத்துள்ளது
New Delhi:

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகளுக்குக் கடந்த 4 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் பிரச்னையின் வீரியம் குறித்து அரசு உணர வேண்டும் என்ற நோக்கில் நிறுவனத்தின் விமானிகள், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். 

சுமார் 1 பில்லியன் டாலர் கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், அதைத் திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. இதனால், தங்கள் நிறுவன ஊழியர்களுக்கும் சரிவச சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறது ஜெட் ஏர்வேஸ்.

இந்த விவகாரம் குறித்து, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சுமார் 20 ஆண்டுகள் பணி செய்து வரும் கேப்டன் கரண் சோப்ரா, ‘விமானத்தின் காக்பிட்டிற்குள் நுழைந்தால் நாங்கள் அனைத்து வித அழுத்தங்களையும் மறந்துவிட்டு எங்கள் பணியைச் செய்யப் பார்க்கிறோம். ஆனால், நாங்களும் மனிதர்கள்தான். ஆனால் இந்த சம்பள பாக்கிப் பிரச்னை எங்களை அதிக அழுத்தத்துக்கு உள்ளாக்குகிறது. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

எங்கள் வேலைகளில் அழுத்தம் என்பது பாதுகாப்பை கேள்விக்குறியாக மாற்றிவிடும். எங்கள் பணியில் பாதுகாப்பு என்பதில் சமரசம் செய்து கொள்ளவே முடியாது' என்று குமுறுகிறார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள், இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரச்னையை குறித்து விளக்கியுள்ளனர். 

ஜெட் ஏர்வேஸ் சார்பில், பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், விமானிகள் அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ஜெட் ஏர்வேஸில் அதிக பங்குகள் வைத்திருக்கும் எத்திஹாட் நிறுவனம், இந்தப் பிரச்னையை சரி செய்ய உதவுமா என்பதில் தெளிவில்லை. அதேபோல ஜெட் ஏர்வேஸுக்கு கடன் கொடுத்த எஸ்.பி.ஐ உள்ளிட்ட வங்கிகள் இந்தப் பிரச்னையை எப்படி அணுக உள்ளனர் என்பதும் தெரியவில்லை. 

ஆனால் நமக்கு வந்தத் தகவல்படி, எஸ்.பி.ஐ வங்கி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், அவரது மனைவி மற்றும் இரண்டு பிரதிநிதிகளை, தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுமாறு பணித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இது குறித்து எஸ்.பி.ஐ வங்கியின் தலைவர் ராஜ்னீஷ் குமார், ‘நாங்கள் கடந்த 5 மாதங்களாக இந்தப் பிரச்னையைத் தீர்க்க முயன்று வருகிறோம். சில சிக்கல்கள் காரணமாக பிரச்னையைத் தீர்ப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ளார். 

ஆனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்ய முடியாத சூழல். காரணம், வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அந்நிறுவனத்தின் விமானிகள், சம்பள பாக்கி கொடுக்கப்படவில்லை என்றால் தொடர்ந்து விமானத்தை இயக்கப் போவதில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இது ஒரு புறமிருக்க, பல விமானிகள் மற்ற விமான நிறுவனங்களில் பணிக்காக விண்ணப்பித்து வருவதாகவும் தெரிகிறது. ஜெட் ஏர்வேஸ், தற்போது நிலவி வரும் பிரச்னையை உடனடியாக தீர்க்கவில்லை என்றால், இந்த விவகாரம் மேலும் மோசமடையும். 

கேப்டன் சோப்ரா, விமானிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து கூறும்போது, ‘எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. ஈ.எம்.ஐ கட்ட வேண்டும், குழந்தைகளின் கல்விக்குப் பணம் கட்ட வேண்டும், மருத்துவ செலவுகள் இருக்கின்றன, பல திருமணங்கள் இந்த விவகாரத்தால் தள்ளிப் போடப்பட்டுள்ளன, சில இளம் விமானிகள் என்னிடம் போன் மூலம் பேசும்போது, ‘சார், நாங்கள் எங்களின் தாயின் நகைகளை அடமானம் வைத்து வாழ்க்கையை ஓட்டி வருகிறோம். இந்தப் பிரச்னையை நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வலியுறுத்துங்கள்' என்று கூறுகிறார்கள்' என்று வேதனைப்பட்டார். 

.