This Article is From Jul 19, 2018

இந்திய கடற்படை போர்க்கப்பல்களைத் தாக்க தீவிரவாதிகள் திட்டம் : உளவுத்துறை எச்சரிக்கை

இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை ஆழ்கடல் தீவிரவாதிகளை வைத்து தாக்க திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது

New Delhi:

ஜெய்ஷ் - இ - மொகமது தீவிரவாத அமைப்பினர் இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை ஆழ்கடல் தீவிரவாதிகளை வைத்து தாக்க திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உளவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜெய்ஷ் - இ - மொகமது தீவிரவாதிகள் இந்திய கடற்படை கப்பல்களைத் தாக்க பாகிஸ்தான், பகவல்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆழ்கடல்களில் தீவிரமாக பயிற்சி பெற்று வருவதாகவும், அதற்கான திட்டங்களையும் வகுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் முக்கியமான ஏவுகணைத் தாங்கி நீர்முழ்கிக் கப்பல்களான ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் மேலும் அணு குண்டு தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்களை பாதுகாக்குமாறு கடற்படைக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் அனைத்து துறைமுகங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், ஆழ்கடல் கண்காணிப்பை பலப்படுத்துவதற்கும் அறிக்கை அனுப்பியுள்ளது. உலகில் உள்ள அனைத்து கடற்படைகளும் தங்களது கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டில், ஏமனில் அல் கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கோல் என்கிற கப்பலை வெடிகுண்டுகள் நிறைந்த படகைக் கொண்டு தாக்கியதில், 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

.