This Article is From Feb 18, 2020

'ஓ.பி.எஸ். மாடு பிடி வீரரா? காளைகளை அடக்கியுள்ளாரா?' - சட்டமன்றத்தில் துரைமுருகன் கேள்வி!!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் எழுப்பிய கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்துள்ளார்.

'ஓ.பி.எஸ். மாடு பிடி வீரரா? காளைகளை அடக்கியுள்ளாரா?' - சட்டமன்றத்தில் துரைமுருகன் கேள்வி!!

விளாத்திகுளம் எம்.எல்.ஏ., துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று அழைத்தார்.

ஓ.பி.எஸ். மாடு பிடி வீரரா? இதற்கு முன்பாக அவர் காளைகளை அடக்கியுள்ளாரா என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரை முருகன் கேள்வி எழுப்பச் சட்டமன்றத்தில் சிரிப்பலை எழுந்துள்ளது.

துணை முதல்வரும் அ.இ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று அ.இ.தி.மு.கவினர் அழைத்து வருகின்றனர். இந்த அடைமொழியைக் கட்சி சுவரொட்டி மற்றும் பேனர்களில் காண முடிகிறது. 

இந்த நிலையில் சட்டமன்றத்தில் ஓ. பன்னீர் செல்வத்தை ஜல்லிக்கட்டு நாயகர் என்று விளாத்தி குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் குறிப்பிட்டுப் பேசினார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவரும் தி.மு.க பொருளாளருமான துரைமுருகன், ஓ.பி.எஸ். என்ன மாடு பிடி வீரரா? இதற்கு முன்பாக அவர் காளைகளை அடக்கியுள்ளாரா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய துரைமுருகன், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு ஓ.பி.எஸ். காளைகளை அடக்கினால் அதனை நேரில் வந்து பார்ப்பதற்கு அவை உறுப்பினர்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்துப் பேசினார். ஜல்லிக்கட்டை நடத்தச் சிறப்பு அனுமதி பெற்றுத் தந்ததால் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தை அன்போடு ஜல்லிக்கட்டு நாயகர் என்று அழைக்கிறோம் என விஜய பாஸ்கர் விளக்கம் அளித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் அடுத்த ஆண்டு விராலி மலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டிற்குத் துரைமுருகன் பார்வையாளராகவோ அல்லது மாடுபிடி வீரராகவோ வரலாம் என அழைப்பு விடுத்தார். 

அமைச்சர் விஜய பாஸ்கரின் பதிலைக் கேட்டு அதிமுக உறுப்பினர்கள் மேசையைத் தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

.