This Article is From Jun 26, 2020

ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலையாகிறாரா சசிகலா… அதிமுகவுக்கு சிக்கலா… பரபர பின்னணி என்ன?

பெங்களூரு நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா

ஆகஸ்ட் 14 ஆம் தேதி விடுதலையாகிறாரா சசிகலா… அதிமுகவுக்கு சிக்கலா… பரபர பின்னணி என்ன?

தன் கணவரான நடராஜன் உயிரிழந்தபோது சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்திருந்தார் சசிகலா.

ஹைலைட்ஸ்

  • பெங்களூரு சிறையில் உள்ளார் சசிகலா
  • 4 ஆண்டு சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது
  • சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை கொடுக்கப்பட்டது

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள, அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, வரும் ஆகஸ்ட் மாதம் விடுதலையாக வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஆசீர்வாதம் ஆச்சாரி, “சசிகலா நடராஜன், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து வரும் ஆகஸ்ட் 14, 2020 அன்று விடுதலையாக வாய்ப்புள்ளது. மேலும் அப்டேட்களுக்குக் காத்திருக்கவும், ” என்று ஒரு பகீர் தகவலை வெளியிட்டார். 

அதிலிருந்து தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் விடுதலை குறித்து பரபரக்கப்பட்டு வருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தரப்போ, சசிகலாவுக்கு நெருக்கமான டிடிவி தினகரன் தரப்போ இதுவரை அவரின் விடுதலை குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இந்நிலையில் பாஜக தரப்பைச் சேர்ந்த ஒருவர் சசிகலா விடுதலை பற்றி பகிரங்கத் தகவலை வெளியிட்டதும் சர்ச்சையாகியுள்ளது. 

இது குறித்து பிரபல அரசியல் நோக்கர் சுமந்த் ராமன், “எப்படி உங்களுக்கு விடுதலையாகப் போகும் தேதி உறுதியாக தெரிகிறது சார்? அவரின் விடுதலையில் உங்களுக்கு ஏதேனும் அரசியல் ரீதியிலான சாதகம் உள்ளதா?” என்று ஆச்சாரியின் ட்விட்டர் பதிவிற்குக் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். 

பெங்களூரு நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தன் கணவரான நடராஜன் உயிரிழந்தபோது சிறையிலிருந்து பரோலில் வெளியே வந்திருந்தார் சசிகலா. பின்னர் அவர் மீண்டும் சிறையிலேயே அடைக்கப்பட்டார். அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனைக் காலம் விதிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் தண்டனை முடிய நாட்கள் இருக்கும் நிலையில், நன்னடத்தைக் காரணமாக சசிகலா சீக்கிரமே விடுதலை செய்யப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், அவர் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து பெங்களூரு சிறைத் துறை தகவல் சொல்ல மறுத்து வருகிறது. இப்படியான சூழலில்தான் ஆசீர்வாதம் ஆச்சாரியின் தகவல் வந்துள்ளது. 

.