This Article is From Jan 07, 2019

72 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆஸி மண்ணில் இந்தியா சாதனை வெற்றி - 10 சுவாரஸ்யங்கள்!

முதல்முறையாக 72 வருடங்களில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது

72 வருட டெஸ்ட் வரலாற்றில் ஆஸி மண்ணில் இந்தியா சாதனை வெற்றி - 10 சுவாரஸ்யங்கள்!

1. 72 வருடமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர்களில் ஆடி வருகிறது. இந்தத் தொடருக்கு முன் நடந்த 11 தொடர்களில் 8 தொடர்களை இழந்து 3 தொடர்களை சமன் செய்து இருந்தது. முதல்முறையாக 72 வருடங்களில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

2. 31 ஆண்டுகளில் சிட்னி டெஸ்ட்டில் தான் ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் பெற்றது. மேலும் 2005ம் ஆண்டுக்கு பிறகு எந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா ஃபாலோ ஆன் வாங்கவில்லை. 14 வருட சாதனைக்கு சிட்னி டெஸ்ட்டில் முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா.

3. இந்தத் தொடரில் 20 கேட்ச்கள் பிடித்ததன் மூலம் ஒரு தொடரில் அதிக கேட்ச்கள் பிடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பெற்றார் ரிஷப் பன்ட். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் 300 ரன்கள் மற்றும் 20 கேட்ச் பிடித்த முதல் சர்வதேச வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

4. ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட். மேலும் ஆஸ்திரேலியாவில் அதிக ரன் குவித்த கீப்பர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பிடித்தார் பன்ட்.

5. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட சதமடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் துவக்க வீரர் ஹாரிஸ் 79 ரன்கள் குவித்ததே ஆஸ்திரேலிய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக பதிவானது.

6. இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா முழுமையாக ஆடிய 7 இன்னிங்ஸ்களிலும் ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்தச் சாதனையை இதுவரை ஆஸ்திரேலியா வந்த எந்த இந்திய அணியும் செய்ததில்லை.

7. இந்திய தரப்பில் 6 சதங்கள் அடிக்கப்பட்டன. புஜாரா 3 சதங்களும், கோலி, ரஹானே, பன்ட் ஆகியோர் தலா ஒரு சதமும் அடித்தனர்.

8. இந்தியா வீழ்த்திய 70 விக்கெட்டுகளில் 50 விக்கெட்டுகளை 4 வேகப்பந்துவீச்சாளர்கள் இணைந்து வீழ்த்தியுள்ளனர். பும்ராஹ் 21 விக்கெட்டுகளையும், ஷமி 16 விக்கெட்டுகளையும், இஷாந்த் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரண்டாவது டெஸ்ட்டில் மற்றும் இடம்பெற்ற வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

9. 521 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு தொடரில் அதிக ரன் குவித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் புஜாரா.

10. 2018ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி ஆஸ்திரேலியா கடைசியாக டெஸ்ட் தொடரை இங்கிலாந்துக்கு எதிராக வென்றது. அதன் பின் 365 நாட்களில் ஆஸ்திரேலியா ஆடிய 3 டெஸ்ட் தொடரையும் தோற்றுள்ளது. தென்னாப்பிரிக்கா 3-1, பாகிஸ்தான் 1-0, இந்தியா 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.

.