This Article is From Jan 04, 2019

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

திருவாரூரில் இடைத்தேர்தலை நடத்த முடியுமா, முடியாதா என ஆய்வு செய்து அறிக்கை தர தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? விளக்கம் கேட்கும் தேர்தல் ஆணையம்!

திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஆக.7 ஆம் தேதியன்று உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, கலைஞரின் மறைவு குறித்து சட்டப்பேரவை அலுவலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக தேர்தல் துறைக்கு கலைஞரின் திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் 28ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமைத்தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்கு எண்ணிக்கை 30 ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் வரும் 10ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.

இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று மனு அளித்தார்.

மேலும் அதில், கஜா புயல் பாதிப்பு என்பது அந்த பகுதியில் அதிகமாக இருப்பதால், தற்போது தேர்தலை நடத்துவது சிரமமான ஒரு விஷயமாக உள்ளது என்பதை வலியுறுத்தியிருந்தார். டி.ராஜா அளித்த அந்த மனுவை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம், இதுதொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்யக்கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ விளக்கம் கேட்டுள்ளார்.
 

.