This Article is From Feb 18, 2019

தொல்லியல் துறைக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

கடந்த 5 ஆண்டுகளில் தொல்லியல் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தொல்லியல் துறைக்கு மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்த தொல்லியல்துறைக்கு உத்தரவிடக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்பவர் மனு தாக்கள் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன் கடந்த பிப்.15 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தை மத்திய தொல்லியல்துறை புறக்கணிக்கிறது. குஜராத்தில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு 1000 கோடியை ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் அகழாய்வு பணிக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் அறிக்கை தாக்கல் செய்வதில் மத்திய அரசு ஆர்வமாக இல்லை.

தமிழகத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஒவ்வொரு அகழாய்வுக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டியதுள்ளது. இவற்றை பார்க்கும் போது, தமிழகத்தின் பாரம்பரியங்களை வெளிப்படுத்துவதில் மத்திய அரசு ஆர்வம் இல்லாமல் இருப்பது தெரிகிறது. தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது? தமிழகத்திற்கு பெருமை என்றால், அது இந்தியாவையும் சாரும்தானே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மத்திய தொல்லியல் துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கதக்கது என்றனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை பிப்.18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் தொல்லியல் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் எத்தனை நடக்கிறது என்றும் தொல்லித்துறையில் எத்தனை பணியிடங்கள் உள்ளன என்றும் பிப்.25 தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

.