This Article is From Jun 29, 2020

பாதுகாப்புப் படையினர் அதிரடி! பயங்கரவாத அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!

இந்த என்கவுண்டர் சம்பவமானது ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

பாதுகாப்புப் படையினர் அதிரடி! பயங்கரவாத அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!

ஹிஸ்புல் முஜாஹிதீனின் மசூத் அகமது பட், தோடா மாவட்டத்தில் கடைசியாக எஞ்சிய பயங்கரவாதி என்று போலீசார் கூறுகின்றனர்

ஹைலைட்ஸ்

  • இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்
  • இந்த நடவடிக்கை பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த பெரிய சாதனைகள்
  • ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி மசூத் அகமது பட் உயிரிழப்பு
Srinagar:

நாட்டின் இறையாண்மைக்கு சவாலாக உள்ள பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை தடுக்க மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று காலை ஜம்ழு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கிற பயங்கரவாத அமைப்பின் தளபதி உயிரிழந்துள்ளார். பாதுகாப்புப்படையினரின் இந்த என்கவுண்டர் சம்பவமானது ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி மசூத் அகமது பட் தவிர, தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் குல்ச்சோஹார் பகுதியில் நடந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். மசூத் இறந்தவுடன், ஜம்மு பிராந்தியத்தில் உள்ள தோடா மாவட்டம் முழுவதும் பயங்கரவாதிகளிடமிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் இந்த பகுதியில் கடைசியாக எஞ்சியிருந்த பயங்கரவாதிகள் எனத் தகவல். 

இந்த பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையானது இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்டது. ஒரு ஏ.கே 47 துப்பாக்கி மற்றும் இரண்டு பிஸ்டல்கள் என்கவுண்டர் சம்பவம் நடந்த  பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

குல் சோஹர் அனந்த்நாக் நகரில் அனந்த்நாக் காவல்துறையினரால் உள்ளூர் ஆர்.ஆர்(Rashtriya Rifles) பிரிவுடன், பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. உயிரிழந்த மாசூத், தோடா மாவட்டத்தின் கடைசி பயங்கரவாதி என ஜே & கே காவல்துறை தலைவர் தில்பாக் சிங் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், “மாசூத் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்று உள்ளது. அவர் அதன் பின்னர் தலைமறைவாகிவிட்டார். பின்னர் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்கிற பயங்கரவாத இயக்கத்துடன் சேர்ந்து காஷ்மீரில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.“ என்றும் தில்பாக் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு காஷ்மீரில் 29 வெளிநாட்டு பயங்கரவாதிகள் செயல்படுவதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

"கோகர்நாக், டிரால் மற்றும் க்ரூவின் மலை பிரதேசங்களில் வெளிநாட்டு பயங்கரவாதிகள் உள்ளனர். தெற்கு காஷ்மீரில் சுமார் 29 வெளிநாட்டு பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகிறார்கள், அவர்கள் சமவெளிப்பகுதிக்கு வரும்பட்சத்தில் நாங்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுப்போம்.“ என காஷ்மீர் காவல்துறை ஜெனரல் (ஐ.ஜி.பி) விஜய் குமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். மேலும்,

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியைச் சேர்ந்த ஹிஸ்புல் முஜாஹிதனை அழித்தொழித்ததன் மூலமாக பாதுகாப்புப் படைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன என்றும், தெற்கு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதத்தை அழிப்பதே இதன் நோக்கம் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். டிரால் பகுதி இப்போது காஷ்மீரில் பயங்கரவாதிகள் இல்லாத பகுதியாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், "இவை பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த பெரிய சாதனைகள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

With inputs from agencies

.