This Article is From Mar 04, 2020

பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.

பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

காவல்துறைக்கு 4 வார கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

ஹைலைட்ஸ்

  • காவல்துறைக்கு 4 வார கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
  • பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
  • எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம் என உச்சநீதிமன்றம் தகவல்
New Delhi:

டெல்லியில் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்களுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது. இந்த மனு மீதான விசாரணையை விரைந்து விசாரிக்கப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்திய நிலையில் இதற்குப் பதிலளித்த தலைமை நீதிபதி, உச்சநீதிமன்றம் இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது, ஆனால் அதன் அதிகாரத்திற்கு என்று சில வரம்புகள் உள்ளன" என்று தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கூறும்போது, இத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சம்பவங்கள் நடந்து முடிந்த பிறகு தான் நிலைமையை நாங்கள் விசாரிக்க முடியும். இது எங்களுக்கு ஒருவகையான அழுத்தமே. எங்களால், இவ்வளவு அழுத்தங்களைக் கையாள முடியாது என்று கூறியிருந்தார். 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்ட அரசியல் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு 4 வாரக் கால அவகாசம் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பாஜக முத்த தலைவர்கள் கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா ஆகியோர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. 

இந்த வழக்கிற்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்த நீதிபதி எஸ்.முரளிதர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த வழக்கை ஒரு மாதத்திற்குத் தள்ளி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டதாக வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார்.

நாங்கள் முதலில் உயர் நீதிமன்றம் சென்றோம், அங்கு வியாழக்கிழமைக்குள் பதிலளிக்கும் படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், இது மிகவும் அவசரமான வழக்கு. தினமும் 10 பேர் கொல்லப்படுகிறனர் என்று வலியுறுத்தினார். தலைமை நீதிபதி பாப்டே 4 வாரம் ஒத்திவைக்கப்பட்டதற்கு ஏதேனும் காரணம் உயர் நீதிமன்றம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ளதா என்றார். அந்த உத்தரவு தாமதத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், உச்சநீதிமன்றம் இத்தகைய வன்முறைகளைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டவே விரும்புகிறது, ஆனால் அதன் அதிகாரத்திற்கு என்று சில வரம்புகள் உள்ளன. எங்களால் செய்ய முடியாத அளவில்  எதிர்பார்ப்புகள் உள்ளது என்று கூறிய அவர், புதன்கிழமை (இன்று) இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், எங்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்ப்போம் என்றும் கூறியிருந்தார். 

வடகிழக்கு டெல்லியில் சிஏஏ.வுக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்திய இரு குழுக்கள் இடையே கடந்த வாரம், மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் இதுவரை மொத்தம் 48 பேர் பலியாகி உள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் 70 பேருக்குக் குண்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், வன்முறை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியதே இந்த மோதல் மற்றும் வன்முறைக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்பட்டது. 

.