This Article is From Dec 03, 2018

''கஜா புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு''- தமிழக அரசு திட்டவட்டம்

தேர்வு நடத்துவது தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்திருக்கிறார்.

''கஜா புயல் பாதித்த பகுதிகளில்  திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு''- தமிழக அரசு திட்டவட்டம்

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரையாண்டுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் தமிழகத்தை தாக்கிய கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருவதால் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரையாண்டுத் தேர்வு நெருங்கி வரும் சூழலில், அது திட்டமிட்டபடி நடக்குமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி புயல்பாதிப்பு மாவட்ட மாணவர்களிடையே இருந்து வந்தது.

இந்த நிலையில், அரையாண்டு தேர்வு குறித்து கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது-

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களை பொருத்தவரையில் அவற்றை வேறு பள்ளிகளுக்கு, கல்லூரிகளுக்கு செல்வதற்கு மதிப்பிடுவதில்லை. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திறனாய்வு தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடைபெறும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

.