This Article is From Jun 09, 2020

என் அமெரிக்கா விமான டிக்கெட்டிற்கு தந்தை ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்: சுந்தர் பிச்சை

தனது உரையில், சுந்தர் பிச்சை தனது கடினமான பாதைகளை நினைவு கூர்ந்தார், சிரமங்களை எதிர்கொண்டு நேர்மறையாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

என் அமெரிக்கா விமான டிக்கெட்டிற்கு தந்தை ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்: சுந்தர் பிச்சை

என் அமெரிக்கா விமான டிக்கெட்டிற்கு தந்தை ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார்: சுந்தர் பிச்சை (FILE)

New Delhi:

உலகளவில் பொருளாதாரத்தில் கடும் சரிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, 2020ல் பட்டம் பெறும் மாணவர்களுக்கு சில நம்பிக்கை அளிக்கும் கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில், வெளிப்படையானவராக இருங்கள், பொறுமையுள்ளவராக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள் என்று தெரிவித்துள்ளார். 

கொடிய தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான சமூக தொலைதூர விதிமுறைகளுக்கு இணங்க, சுந்தர் பிச்சை தனது "வீட்டு பின்புறத்திலிருந்து" உலகெங்கிலும் உள்ள மாணவர்கள் பங்கேற்ற காணொளி பட்டமளிப்பு விழா மூலம் உரையாற்றினார்.

தனது உரையில், சுந்தர் பிச்சை தனது கடினமான பாதைகளை நினைவு கூர்ந்தார், சிரமங்களை எதிர்கொண்டு நேர்மறையாக இருப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர இந்தியாவை விட்டு வெளியேறியபோது அவர் சந்தித்த சவால்களை அவர் விவரித்தார்.

அப்போது அவர் கூறும்போது, எனது தந்தை அமெரிக்காவிற்கு நான் விமானத்தில் செல்வதற்காக விமான டிக்கெட் எடுக்க ஒரு வருட சம்பளத்தை செலவிட்டார், அதனால் நான் ஸ்டான்போர்டில் படிக்க முடிந்தது. அப்போதுதான் நான் ஒரு விமானத்தில் முதல் முறையாக சென்றேன். அமெரிக்கா மிக காஸ்ட்லியானது. 

வீட்டிற்கு ஒரு முறை தொலைபேசியில் பேச ஒரு நிமிடத்திற்கு 2 டாலருக்கும் அதிகமாக இருந்தது , அதாவது இந்தியாவில் எனது அப்பாவின் மாத சம்பளத்திற்கு சமமான தொகை அப்போது தொலைப்பேசியில் பேச செலவாகும். 

நான் அந்த நிலையில் இருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அதிர்ஷ்டம் என்பதையும் தாண்டி தொழில்நுட்பம் மீதான என்னுடைய தீரா ஆசைதான் காரணம்.

யூடியூப்பில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் முன்னாள் அமெரிக்க முதல் பெண்மணி மைக்கேல் ஒபாமா, பாடகியும் நடிகையுமான லேடி காகா, பாடகர் பியோனஸ் மற்றும் தென் கொரிய இசைக்குழு பி.டி.எஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, சுந்தர் பிச்சை பேசும்போது, இப்போதெல்லாம் குழந்தைகள் பல்வேறு வடிவம் மற்றும் அளவுகள் கொண்ட அனைத்து வகையான கம்ப்யூட்டர்களுடன் வளர்ந்து வருகிறார்கள். நான் அந்த காலத்தில் தொழில்நுட்பத்திற்கான எந்த அணுகலும் இல்லாமல் வளர்ந்தேன். 

எனக்கு பத்து வயது வரை நாங்கள் தொலைபேசியை பார்த்து இல்லை. நான் பட்டதாரியாவதற்காக அமெரிக்கா வரும் வரை கம்ப்யூட்டரையும் டிவியையும் எளிதில் அணுக முடியாது. நான் வளர்ந்த போது தொலைக்காட்சியில் ஒரே ஒரு சேனல் மட்டுமே இருந்தது.

உங்கள் பொறுமையை இழக்காதீர்கள், இது அடுத்த தொழில்நுட்ப புரட்சியை உருவாக்கும், மேலும் எனது தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை உருவாக்க இது உதவும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து, பின்னர் கரக்பூர் ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றார், பின்னர் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றார். கடந்த 2004ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த அவர் 2015ம் ஆண்டு அந்நிறுவனத்தின் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டார்.

(With Inputs From PTI)

.