This Article is From Aug 26, 2018

‘சென்னை அமைதி பேரணிக்குப் பிறகு திமுக-வில்…’- அழகிரி எச்சரிக்கை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கு ஆயத்தமாகி வருகிறார்

‘சென்னை அமைதி பேரணிக்குப் பிறகு திமுக-வில்…’- அழகிரி எச்சரிக்கை
Madurai:

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி தனது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுக்கு ஆயத்தமாகி வருகிறார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ‘செப்டம்பர் 5 ஆம் தேதி நடக்கவுள்ள சென்னை பேரணிக்குப் பிறகு திருப்பம் வரும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநிதி கடந்த 7 ஆம் தேதி காலமானார். இதையடுத்து, அவர் 8 ஆம் தேதி மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, சில நாட்களுக்குப் பின்னர் கருணாநிதி அடக்கம் செய்த இடத்துக்குச் சென்ற அழகிரி, ‘என் மனதில் இருந்த ஆதங்கத்தை அப்பாவிடம் சொல்லவிட்டேன். அது குறித்து மக்களுக்கு விரைவில் தெரியவரும். திமுக-வின் உண்மை விசுவாசிகள் என் பக்கம் தான் உள்ளனர்’ என்று கருத்து கூறி பகீர் கிளப்பினார்.

இதனால் திமுக-வில் மீண்டும் ஸ்டாலின் - அழகிரி மோதல் வலுக்கத் தொடங்கியது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அழகிரி, ‘அடுத்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடத்த உள்ளேன். அந்தப் பேரணிக்குப் பிறகு எனது அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தெரிவிப்பேன். எனது ஆதரவாளர்கள் அனைவரிடமும் கருத்து கேட்டறிந்த பின்னர் தான் அடுத்தக்கட்டம் குறித்து முடிவெடுப்பேன்’ என்று தனது அரசியல் நகர்வு குறித்து தெரிவித்தார். 

இது ஒருபுறமிருக்க வரும் 28 ஆம் தேதி சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடக்க உள்ளது. இந்த பொதுக் குழுக் கூட்டத்தில், செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. 

இந்நிலையில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ‘வரும் 5 ஆம் தேதி வரை அனைரும் பொறுமை காக்க வேண்டும். அப்போது தலைவருக்காக நடத்தப்பட உள்ள அமைதிப் பேரணியில், தொண்டர்கள் என்னை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள் என்று தெரியும். அந்த அமைதிப் பேரணியைத் தொடர்ந்து திமுக-வுக்கு நிச்சயம் அச்சுறுத்தல் வரும். என் தேர்தல் பணிகளையும், ஒருங்கிணைப்புப் பணிகளையும் எனது அரசியல் எதிரிகள் கூட பாராட்டுவர். சில திமுக தலைவர்கள் இப்போதாவது என்னைப் பற்றி தெரிந்து கொள்வர்’ என்றவர்,

‘தலைவர் கருணாநிதி உயிருடன் இருக்கும்போதே, எந்தப் பதவிக்கும் நான் ஆசைப்பட்டதில்லை. அப்படியிருக்க, இப்போது நான் எப்படி பதவிக்கு ஆசைப்படுவேன். எனக்கு திமுக தலைவராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஸ்டாலின், திமுக தலைவராக பொறுப்பேற்க அவசரம் காட்டுகிறார். நான் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படவில்லை என்றால், கடந்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலைப் போன்று வரும் தேர்தல்களிலும் தோல்வியைத்தான் தழுவ வேண்டியிருக்கும்’ என்று எச்சரித்துள்ளார்.

.