This Article is From Jan 19, 2019

''வாக்குப்பதிவு இயந்திரம் என்பது திருட்டு மெஷின்'' - பரூக் அப்துல்லா காட்டம்

எதிர்க்கட்சிகள் பலவும் மின்னணு வாக்குப்பதிவு முறையை ஒழித்து விட்டு மீண்டும் வாக்குச் சீட்டை பயன்படுத்தி தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

ஜம்மு காஷ்மீர் பிரச்னைக்கு பாஜகவே காரணம் என்று பரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.

Kolkata:

வாக்குப்பதிவு இயந்திர முறையில் தேர்தல் நடத்துவதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மம்தா நடத்திய கொல்கத்தா மாநாட்டில் பேசிய அவர், வாக்குப்பதிவு எந்திரத்தை சுட்டிக் காட்டி, ''ஓட்டு மெஷின் அல்ல; அது திருட்டு மெஷின்'' என்று காட்டமாக விமர்சித்துள்ளார். 


எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாட்டை நடத்தி வருகிறார். இதில் பரூக் அப்துல்லா பேசியதாவது-


வாக்குப்பதிவு எந்திரம் என்பது ஒரு திருட்டு மெஷின். நாம் அனைவரும் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து வாக்குச் சீட்டு முறையில் தேர்தலை நடத்த வலியுறுத்த வேண்டும். 


வாக்குப்பதிவு எந்திர முறையில் தேர்தலை நடத்த அனுமதிக்கக் கூடாது. ஜம்மு காஷ்மீரில் இப்போது பிரச்னை பற்றி எரிகிறது. அதற்கு பாஜகதான் காரணம். மக்களை மத அடிப்படையில் பிரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது. அதனை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் வாக்குப்பதிவு இயந்திர முறையில் தேர்தல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இருப்பினும் இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் திரும்பத் திரும்ப கூறி வருகிறார். 

.