This Article is From May 23, 2019

தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா? கள நிலவரம்

தி.மு.க-வின் கனவு மத்தியிலும் பலிக்கவில்லை. மாநிலத்திலும் நடக்கவில்லை.

தேர்தல் முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழுமா? கள நிலவரம்

இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என இந்தியாவிலேயே முதல்முறையாக அறிவித்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். முரசொலிக்கு நடந்த பவள விழாவில் ராகுல் காந்தியை மேடையில் வைத்து அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்மூலம் தமிழகத்தில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி உறுதியானது. 

தொடர்ந்து, மத்தியில் ஆட்சியில் உள்ள பி.ஜே.பி-யை அகற்றிவிட்டு, புதிதாக ஆட்சிக்கு வரும் காங்கிரஸ் அமைச்சரவையில் தி.மு.க-வை இடம் பெறச் செய்யலாம் என்று திமுக  நினைத்திருந்தது. அதோடு, பி.ஜே.பி கூட்டணியில் உள்ள அ.தி.மு.க ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதையும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி கலைத்துவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று தி.மு.க நினைத்தது.

அதற்கேற்ப தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் 35-க்கும் மேலான இடங்களைக் கைப்பற்றும் நிலையில் தற்போது உள்ளது. ஆனால், அகில இந்திய அளவில் வெளியாகும் தேர்தல் முடிவுகள் மு.க.ஸ்டாலினின் கனவைக் கலைத்துவிட்டது. அகில இந்திய அளவில் பி.ஜே.பி தனித்தே 300 இடங்களைக் கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள பி.ஜே.பி-க்கு வேறு எந்தக் கட்சியின் ஆதரவும் தேவையில்லை.

அந்தக் கட்சி தனித்தே ஆட்சி அமைக்கிறது. அதன் கூட்டணியில் உள்ள அ.தி.மு.க-வுக்கு தி.மு.கவால் இனி எந்த தொந்தரவும் கொடுக்க முடியாது. ஒருவேளை தமிழகத்தில் தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் 22 இடங்களையும் தி.மு.க கைப்பற்றி இருந்தால், மத்தியில் பி.ஜே.பி ஆட்சி அமைந்தாலும்  நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை கலைத்துவிடும் வேலைகளை நம்பிக்கையாக ஈடுபட்டு இருக்கலாம்.

ஆனால், தற்போது அதற்கான சூழலும் இல்லை. 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க 11 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அவர்களுக்குத் தேவை வெறும் 6 இடங்கள்தான். அதனால், மாநிலத்திலும் தி.மு.க-வின் திட்டம் பலிக்கவில்லை. ஆக, தி.மு.க நடத்திய அரசியல் ஆபரேஷனில், ஆபரேஷன் சக்சஸ்... ஆனால், பேஷன்ட் டெத்!   

தி.மு.க-வின் கனவு மத்தியிலும் பலிக்கவில்லை. மாநிலத்திலும் நடக்கவில்லை.

.