This Article is From Sep 26, 2019

“2 அணு ஆயுத நாடுகள் சமாதானம் ஆகவில்லை என்றால்…”- இந்தியா - பாகிஸ்தானை எச்சரிக்கும் Trump!

காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை, US President Donald Trump, மத்தியஸ்தம் செய்ய, தான் தயார் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்.

“2 அணு ஆயுத நாடுகள் சமாதானம் ஆகவில்லை என்றால்…”- இந்தியா - பாகிஸ்தானை எச்சரிக்கும் Trump!

ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் Donald Trump

ஹைலைட்ஸ்

  • இந்தியா - பாக் இடையே மத்தியஸ்தம் செய்ய ட்ரம்ப் தொடர்ந்து விருப்பம்
  • இந்தியா, ட்ரம்பிற்கு 'நோ' சொல்லி வருகிறது
  • இரு நாட்டுப் பிரதமர்களையும் சமீபத்தில் சந்தித்தார் ட்ரம்ப்
New Delhi:

காஷ்மீர் (Kashmir) விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் (India - Pakistan) நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு நிலவுவதாகவும், அதைத் தீர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் (Donald Trump).

ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நடந்து வரும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டுப் பிரதமர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் ட்ரம்ப். இரு நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்பு குறித்து ட்ரம்ப், “இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசினேன். மத்தியஸ்தமோ, சமாதானமோ, இந்த விவகாரத்தில் எந்த உதவியை வேண்டுமானாலும் செய்யத் தயார்” என்று கூறியுள்ளார். 

“அந்த இரு நாட்டையும் ஆட்சி செய்து வரும் நபர்கள் எனது நண்பர்கள். நான், அவர்கள் இருவரிடமும் சொன்னது, எப்படியாவது பிரச்னையைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான். இரண்டும் அணு ஆயுத நாடுகள். கண்டிப்பாக இந்தப் பிரச்னையைத் தீர்க்கத்தான் வேண்டும்” என்று விரிவாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப். 

காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதிபர் ட்ரம்ப், மத்தியஸ்தம் செய்ய, தான் தயார் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையீடு இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது இந்தியா. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பின்னர் ட்ரம்ப், 4வது முறையாக காஷ்மீர் விவகாரத்தில் தலையிடத் தயார் என்று தெரிவித்தார். 

கடந்த மாதம் ஜம்மூ காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்தது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசு, கடும் எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச அளவில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி வருகிறது. 
 

(With inputs from PTI, ANI) 

.