This Article is From Jan 28, 2019

ஸ்விக்கியில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஸ்விக்கி நிறுவனத்தில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

ஸ்விக்கியில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல் செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் ஆசிரியர்கள், மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கிய இந்தப் போராட்டம் தொடர்ந்து இன்று 7வது நாளாக நடந்து வருகிறது.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் இன்றைக்குள் பணிக்குத் திரும்ப இறுதியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பணிக்குத் திரும்பாத ஆசிரியர்களின் பணியிடங்கள், காலிப்பணியிடங்களாக கருதப்பட்டும் என்றும் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் தமிழக அரசின் எச்சரிக்கையும் மீறி தமிழகம் முழுவதும் இன்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் வராத காரணத்தால் மாணவ, மாணவிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், இன்று இதுதொடர்பான வழக்கில் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தேர்வு நேரம் என்பதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் நாளை மதியம் முடிவை தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப எடுத்த நடவடிக்கை குறித்து அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

தொடர்ந்து ஆசிரியர் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், ஆசிரியர்கள் போராட்டத்தால் எதிர்கால சந்ததியினர் தான் பாதிக்கப்படுவார்கள் என்றும் வேதனை தெரிவித்தார்.

கூரியர், உணவகங்கள், ஸ்விக்கி நிறுவனத்தில் எத்தனை பட்டதாரிகள் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா? உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் பணிக்கு எத்தனை பட்டதாரிகள் போட்டியிடுகின்றனர் என தெரியுமா? துப்பரவு பணிக்கு எத்தனை பட்டதாரிகள், மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கிறார்கள் என்று தெரியுமா?

கூலித் தொழிலாளர்கள் போல் சாலையில் இறங்கி போராடுவது ஆசிரியர்களுக்கு அழகா? அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களை ஆசிரியர்கள் வசைபாடுவது சரிதானா? அரசியல்வாதிகளை வசைபாடும் ஆசிரியர்கள் தங்கள் செயல்பாடுகளை உணர்ந்து பார்க்க வேண்டும் என்று கூறிய நீதிபதி கிருபாகரன், தனியார் பள்ளியில் பயிலும் அரசுப் பள்ளி ஆசிரியரின் குழந்தைக்கு பாடம் எடுக்க கூடாது என கூறினால் ஏற்பீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றாலும் வேலைநிறுத்தத்தை கைவிட வேண்டும் என்று ஆசிரியர்களை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறினார்.

.