This Article is From Mar 07, 2020

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்

அனைத்து இடங்களிலும் உள்ள திமுகவின் கட்சிக் கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் காலமானார்

அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமாவார்.

ஹைலைட்ஸ்

  • அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமாவார்
  • க. அன்பழகன் இன்று காலை காலமானார், அவருக்கு வயது 97
  • சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்
Chennai:

கடந்த 43 ஆண்டுகளாக திமுகவின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்து வந்த மூத்த அரசியல் தலைவர் பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை காலமானார், அவருக்கு வயது 97. கடந்த சில நாட்களாகவே உடல்நலம் குன்றி காணப்பட்ட அவர் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

பேராசிரியர் க.அன்பழகன் 1977ம் ஆண்டு முதல் ஒன்பது முறை திமுகவின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தவர். அவர் ஒன்பது முறை எம்.எல்.ஏ., பதவியிலும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும், மேலும் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சராகவும் திகழ்ந்தவர்.  க.அன்பழகன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய  நண்பருமாவார்.

1944 முதல் 1957 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றியதால் அவர் 'பேராசிரியர்' என்று அழைக்கப்பட்டார். அன்பழகனின் இறப்பு குறித்து தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் "பொதுச் செயலாளர் க. அன்பழகனின் மறைவுக்கு திமுக இரங்கல் தெரிவிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திமுக தனது கட்சியின் அனைத்து செயல்பாடுகளையும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கும் என்றும், மேலும் அனைத்து இடங்களிலும் உள்ள திமுகவின் கட்சிக் கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அன்பழகனின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் வெளியிட்டு வருகின்றனர். இன்றுமாலை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறவுள்ளது. 

.