This Article is From Sep 16, 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான முடிவு எடுக்கப்படும் - தமிழக ஆளுநர்

கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலையில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நியாயமான முடிவு எடுக்கப்படும் - தமிழக ஆளுநர்

சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலையில் நியாயமான முடிவு எடுக்கப்படும் என்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயகுமார், ராப்ர்ட் பயாஸ், ரவிசந்திரன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 வருடங்களாக சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
அப்போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது. அதனை தொடர்ந்து, மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்திருந்தது.

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக, தமிழக அரசின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை' என ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி தமிழக அரசு செய்த பரிந்துரை தொடர்பாக மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியதாக ஊகத்தின் அடிப்படையில் சில தொலைக்காட்சிகள் விவாதம் நடத்தின. உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எதுவும் அனுப்பப்படவில்லை. இது சட்டப்பூர்வமான அரசியலமைப்பு சார்ந்த பிரச்னைகளை உள்ளடக்கிய வழக்கு எனவே இதில் ஆலோசனைகள் தேவைப்படுகிறது. வழக்கு தொடர்பான ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட கோப்புகள் ஆளுநர் மாளிகைக்கு நேற்று வந்தடைந்தது. அந்த ஆவணங்களை ஆழ்ந்து பரிசீலிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 7 பேர் விடுதலையில் நியாயமான முடிவு எடுக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.