காங்., தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்றுவதற்கான பணிகளை தொடங்குங்கள்: சோனியா காந்தி

கட்சித் தலைமையை மாற்றியமைக்க கோரி 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்தில், தலைவர் பதவி குறித்து கூட்டு முடிவெடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

காங்., தலைவர் பதவியில் இருந்து என்னை மாற்றுவதற்கான பணிகளை தொடங்குங்கள்: சோனியா காந்தி

New Delhi:

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும், தனக்கு மாற்றாக வேறு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் என இடைக்கால தலைவர் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். கட்சித் தலைமையை மாற்றியமைக்க கோரி 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்தில், தலைவர் பதவி குறித்து கூட்டு முடிவெடுக்க வலியுறுத்தியுள்ளனர். இது காங்கிரஸின் 134 ஆண்டுகால வரலாற்றில் பெரும்பகுதியை வழிநடத்திய காந்தி குடும்ப தலைமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா தனது முடிவை தெரிவித்ததும், சோனியாவே தொடர்ந்து தலைவராக இருக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். 

இதனிடையே, ராகுல் காந்தியும் தலைவர் பதிவியை ராஜினாமா செய்த தனது முடிவில் உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ராகுல் காந்தி பதவி விலகிய பின்னர் இடைக்கால தலைவராக பதவியேற்ற சோனியா காந்தி தனது பதவியை தொடர விரும்பவில்லை என தனது உதவியாளர்களிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்குமாறு அவர் கட்சியைக் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவித்தன. 

இந்நிலையில்,, காணொளி காட்சி மூலம் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று காலை கூடியது. இதில், சோனியா தனது முடிவை தெரிவித்துவிட்டார். இதைத்தொடர்ந்து, காங்கிரஸூக்கு தற்போது இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது. ராகுல் காந்தியும் தலைவர் பதவி வகிக்க மறுத்து விட்டால், கட்சி செயற்குழு தேர்தல் நடத்தியோ, அல்லது ஒருமனதுடனோ காந்தி குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் வரை சோனியா காந்தி இடைக்கால தொடரலாம். மற்றொரு வழியாக, ராகுல் காந்தி இடைக்கால தலைவராக இருக்க ஒப்புதல் தெரிவிக்கலாம். 

கடந்த ஆக.7ம் தேதி அதிருப்தியாளர்கள் கடிதம் அளித்த நிலையில், காந்தி குடும்பத்திற்கு விசுவாசிகளாக உள்ளவர்கள் சோனியா காந்தி பதவியில் நீடிக்க வலியுறுத்தியுள்ளனர். 

தலைமை மீதான "நிச்சயமற்ற தன்மை" மற்றும் கட்சியில் "சறுக்கல்" தொண்டர்களை மனச்சோர்வடையச் செய்து கட்சியை பலவீனப்படுத்தியுள்ளது என்று மூத்த தலைவர்களான கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவான், விவேக் தங்கா மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்சியின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி ராஜினாமா செய்ய முன்வருவதாகக் கூறியதால், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அவரது சத்தீஸ்கர் பிரதிநிதி பூபேஷ் பாகேல் போன்ற தலைவர்கள் அவருக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்தனர்.

தொடர்ந்து, அதிருப்தியாளர்களைத் தாக்கிய அமரீந்தர் சிங், "இதுபோன்ற ஒரு பிரச்சினையை எழுப்புவதற்கான நேரம் இதுவல்ல, நாட்டின் அரசியலமைப்பு நெறிமுறைகளையும் ஜனநாயகக் கொள்கைகளையும் அழிக்கத் தயாராக உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான எதிர்ப்பே தற்போது தேவை, என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக கொண்டுவருவதற்கான குரல்களும் எழுந்துள்ளன. இதுதொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பதிவில், நமது அரசியலமைப்பை - ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான மிகப்பெரிய சவாலை நாடு எதிர்கொள்வதால் ராகுல் காந்தி முன்னால் வந்து காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வார் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.