This Article is From Apr 17, 2020

எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் சுமார் 4,500 பேர் பலி!

கொரோனாவின் மையமாக இருக்கும் நியூயார்க்கில் மட்டும் இதுவரை 12,000 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். 

எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் சுமார் 4,500 பேர் பலி!

அமெரிக்காவில் இதுவரை, 6,67,800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • உலகிலேயே அமெரிக்காதான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது
  • அமெரிக்காவில் 6 லட்சத்திற்கு அதிகமானோர்க்கு கொரோனா பாதிப்பு
  • நியூயார்க்கில்தான் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது
Washington:

கொரோனா வைரஸால் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில், நாளுக்கு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 32,917 பேர் இறந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக, 4,491 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

அதே நேரத்தில் இந்த கணக்கானது, ‘கொரோனாவால் இறந்திருக்கக்கூடும்' என்பவர்களின் எண்ணிக்கையும் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகர நிர்வாகம், இந்த வாரம் ‘கொரோனாவால் இறந்திருக்கக்கூடும்' என்று கருதும் 3,778 நபர்களை, தங்கள் கொரோனா இறப்புக் கணக்கில் சேர்க்க உள்ளதாக தெரிவித்துள்ளது.  

அமெரிக்காவின் நோய்த் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள தகவல்படி, வியாழக்கிழமை இரவு வரை தங்கள் நாட்டில் 31,071 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார்கள் என்று கூறியுள்ளது. இதில், ‘கொரோனாவால் இறந்திருக்கக்கூடும்' என்று கருதப்படும் 4,141 பேரையும் சேர்த்தே கணக்கிடப்பட்டுள்ளது. 

உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து இத்தாலியில் 22,170 பேரும், ஸ்பெயின் நாட்டில் 19,130 பேரும் மரணமடைந்துள்ளார்கள். 

அமெரிக்காவில் இதுவரை, 6,67,800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் அமெரிக்காவில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

கொரோனாவின் மையமாக இருக்கும் நியூயார்க்கில் மட்டும் இதுவரை 12,000 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகியுள்ளனர். 

இப்படிப்பட்ட சூழலில் மீண்டும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்வது குறித்துப் பேசியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாகாணத்தின் ஆளுநர்கள், தங்கள் மாகாண பொருளாதாரத்தை படிப்படியாக மீட்பது குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார். 


 

.