“சீனாவுக்கு நேர்ந்தது, அனைத்து நாடுகளுக்கும் வரும்…”- எச்சரிக்கும் WHO; பின்னணி என்ன?

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்தான் கொரோனாவின் தாக்கம் பெரியதாக உள்ளது.

“சீனாவுக்கு நேர்ந்தது, அனைத்து நாடுகளுக்கும் வரும்…”- எச்சரிக்கும் WHO; பின்னணி என்ன?

உலகளவில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1,45,000 பேர் அதனால் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 

ஹைலைட்ஸ்

  • சீனாவின் உஹான் நகரத்தில்தான் கொரோனா வைரஸ் உருவானது
  • சீனாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது
  • சீனாவில் நிகழ்ந்த மரண எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் பிழை இருந்துள்ளது
Geneva, Switzerland:

சீனாவின் உஹான் நகரம்தான், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் மையமாக இருந்தது. தற்போது உஹான் நகரம், கொரோனாவிலிருந்து விடுபட்டு மீண்டு வந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், உஹானில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை சுமார் 50 சதவீதம் உயர்த்தியுள்ளது சீன அரசு தரப்பு. இறப்பு எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் தவறு நடந்து விட்டதாகவும், அதனால்தான் தற்போது அதன் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் காரணம் சொல்லப்படுகிறது. 

இது குறித்து உலக சுகாதார அமைப்பான WHO, கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த பிறகு சீனாவைப் போல மற்ற நாடுகளும் தங்கள் இறப்பு விகிதத்தில் மாற்றம் செய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. 

உஹான் நகர நிர்வாகம், மரண எண்ணிக்கை விவகாரம் குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி, உஹானில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையில் 1,290 பேரை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் உஹானில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,869 ஆக அதிகரித்துள்ளது. 

உஹானில் கொரோனா மரணங்கள் தவறுதலாக கணக்கிடப்பட்டது குறித்து அந்நகர அரசு, ‘கொரோனா வைரஸ் பூதாகரமான போது, அரசு பணியாளர்களால் அனைத்து விஷயங்களையும் சரியாக கையாள முடியவில்லை. பல நேரங்களில் முக்கிய விவகாரங்கள் தாமதகாவும், சில நேரங்களில் ஆவணப்படுத்தப்படாமலும் போனது. ஆரம்பக் கட்டத்தில் எங்களால் எல்லோருக்கும் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிலர், வீட்டிலேயே கொரோனா தொற்றால் இறந்து போனார்கள். அது குறித்தும் சரியாக பதிவு செய்யப்படவில்லை,' என விளக்கம் கொடுத்துள்ளது.

இவ்விவகாரம் குறித்து உலக சுகாதார அமைப்பின், கோவிட்-19 தொழில்நுட்ப பிரிவு தலைவர், மரியா வான் கெர்கோவ், “ஒரு வைரஸ் பரவலின்போது இருக்கும் சவால் இது. வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரையும் மற்றும் இறந்தவர்கள் அனைவரையும் கணக்கிடுவது மிகக் கடினமானது. 

பல நாடுகளிலும் வரும் காலங்களில் இதைப் போன்று நடக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறேன். அனைத்து பாதிப்புகள் மற்றும் மரணங்களை நாம் கணக்கில் கொண்டோமா என்பதை நாடுகள் ஆராயும்போது, இந்த விகித மாற்றம் நடைபெறும் என நினைக்கிறேன்,” என விளக்கம் கொடுத்துள்ளார். 

இதை ஆமோதிக்கும் வகையில் உலக சுகாதார அமைப்பின், அவசரநிலை பிரிவின் இயக்குநர், மைக்கெல் ரையன், “சீனாவில் செய்யப்பட்டுள்ளது போல எண்ணிக்கை மாற்றம் மற்ற நாடுகளிலும் நடக்கும் என்று கணிக்கிறேன். ஆனால், அரசுகள் எந்தளவுக்கு துல்லியமான தரவுகள் கொடுக்க முடிகிறதோ அந்த அளவுக்கு தொற்று குறித்து நம்மால் சரியான கணிப்புகளை வெளியிட முடியும். அதனால், முடிந்தளவு சீக்கிரமே துல்லியமான மதிப்பீடுகளை அரசுகள் செய்ய வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளார். 

உலகளவில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், 1,45,000 பேர் அதனால் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில்தான் கொரோனாவின் தாக்கம் பெரியதாக உள்ளது. அதே நேரத்தில் ஆப்ரிக்காவிலும் கொரோனா தொற்று பெருமளவு பரவக்கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறார் WHO-வின் இயக்குநர், டெட்ரோ அதானோம்.

ஆப்ரிக்காவில் இதுவரை 11,843 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், 550 பேர் மரணமடைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. அதே நேரத்தில் ஆப்ரிக்காவில் கொரோனா தொற்று, கட்டுப்படுத்த முடியாத வகையில் சென்றுவிடவில்லை என்றும் நம்பப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று, வன விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகவே நம்பப்படுகிறது. சீனாவில் உள்ள ‘வெட் மார்க்கெட்களில்' இருந்துதான், இந்த வைரஸ் தொற்று மனிதர்களுக்குப் பரவியிருக்கக்கூடும் என்று கணிக்கப்படுகிறது. 

சீனாவில் உள்ள வெட் மார்க்கெட்டுகளில் இறைச்சி, காய்கறிகள், மீன் வகைகள், உயிருடன் உள்ள விலங்குகள் மற்றும் வன விலங்குகளும் விற்கப்படுகின்றன. இந்த சந்தைகளுக்குத் தடை விதிக்கக் கோரி தொடர்ந்து குரல்கள் எழுந்து வருகின்றன. 

இது குறித்து உலக சுகாதார அமைப்பு, “வெட் மார்க்கெட் மூலம்தான் பல கோடி மக்களுக்கு உணவு கிடைக்கிறது. வேலை கிடைக்கிறது. ஆனால், அவைகள் முறையாக செயல்படுவதில்லை. 

இந்த மார்க்கெட்டுகள் செயல்படுமேயானால் அதிக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துடன் செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அரசுகள் வனவிலங்குகளை உணவுக்காக சந்தைப்படுத்தப்படுவதை எதிர்த்து கறார் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தியுள்ளது. 

மனிதர்களுக்கு வரும் வைரஸ் தொற்றுகளில் சுமார் 70 சதவீதம், பிற உயிரினங்கள் வழியாகவே வருகிறது என்று உலக சுகாதார அமைப்புக் கூறுகிறது.