கொரோனா அச்சுறுத்தல் : இந்தியாவின் 21 நாட்கள் ஊரடங்கு நடவடிக்கையை பாராட்டும் ஐ.நா.!!

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 656-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் : இந்தியாவின் 21 நாட்கள் ஊரடங்கு நடவடிக்கையை பாராட்டும் ஐ.நா.!!

கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் 21 நாட்கள் தொடர் ஊரடங்கு
  • இந்தியாவுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐ.நா. கருத்து
  • 21 நாள் ஊரடங்கை விரிவான, வலிமையான நடவடிக்கை என்று பாராட்டியுள்ளது ஐ.நா.
United Nations:

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக இந்தியா மேற்கொண்டிருக்கும் ஊரடங்கு நடவடிக்கையை ஐ.நா. சபை பாராட்டியுள்ளது. இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்துக்கும் உறுதுணையாக இருப்போம் என்று ஐ.நா. கூறியுள்ளது. மிகப் பரந்த அளவில் வலுவான நடவடிக்கையை இந்தியா செய்துள்ளதாக ஐ.நா. பாராட்டியிருக்கிறது.

உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் 4.20 லட்சம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் உயிரிழப்பு 18,915-ஆக உயர்ந்துள்ளது. சுமார் 180-க்கும் அதிகமான நாடுகளை கொரோனா பாதித்திருக்கிறது.

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 656 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நிலைமை தீவிரம் அடைந்து விடக்கூடாது என்று கருதியுள்ள மத்திய அரசு, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை நேற்று முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது. 

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் சுமார் 125 கோடிப்பேர் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். உலகின் மிகப்பெரும் முடக்கமாக இது பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில், இந்தியாவை பாராட்டியுள்ள ஐ.நா.சபை இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் வௌியிட்டுள்ளது. அதில், 'கொரோனாவை கட்டுப்படுத்தும் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம் 'என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று சுய ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் சுமார் 130 கோடிப்பேர் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தனர். இதையும் ஐ.நா. பாராட்டியுள்ளது. 

ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்திற்கான இந்தியப் பிரதிநிதி ஹெங்க் பெக்டேம் கூறுகையில், 'இந்தியா ஒரு விரிவான அதே நேரத்தில் வலுவான நடவடிக்கையை செய்திருக்கிறது. கண்காணிப்பு, சோதனைக் கூடங்கள் அமைத்தல், பாதிக்கப்பட்டோரைக் கண்காணித்து அவர்களைத் தனிமைப்படுத்துதல் என மிகப்பெரும் முயற்சிகளை இந்தியா செய்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம். ' என்று பாராட்டியுள்ளார்.

சர்வதேச அச்சுறுத்தலான கொரோனாவை ஒழிப்பதற்கு உலக சுகாதார நிறுவனம், ஐ.நா.வின் மற்ற அமைப்புகள், மத்திய மாநில அரசுகள் உள்ளிட்டவை ஒருங்கிணைப்புடன் செயல்படுகின்றன. 

பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல், அவர்கள் தொடர்பு கொண்டவர்களைக் கண்டுபிடித்து அவர்களைத் தனிமைப்படுத்துதல், கொரோனா பரவலைக் கண்காணித்தல், அசாதாரண சூழலுக்கு தயார்ப்படுத்திக் கொள்ளுதல், சமூக பரவலைத் தடுத்தல், ஊரடங்கை வெற்றிகரமாக நடத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Listen to the latest songs, only on JioSaavn.com