This Article is From Apr 02, 2020

சீனா சொல்லும் கொரோனா மரண எண்ணிக்கை… “எப்படி நம்புவது..?”- பகீர் கேள்வியெழுப்பும் டிரம்ப்!!

சீனா, கொரோனா வைரஸால், தங்கள் நாட்டில் 82,361 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், 3,316 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

சீனா சொல்லும் கொரோனா மரண எண்ணிக்கை… “எப்படி நம்புவது..?”- பகீர் கேள்வியெழுப்பும் டிரம்ப்!!

அமெரிக்காவில் இதுவரை 2,06,207 பேருக்கு கொரோனா இருப்பதும், 4,542 பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் 2 லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு
  • சீனாவில் தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது
  • சீனாவில் சுமார் 80,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்
Washington:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சீனாவில் உயிரிழந்தவர்கள் குறித்து அந்நாட்டு அரசு சொல்லும் எண்ணிக்கையை எப்படி நம்புவது என்று கேள்வியெழுப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். 

வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “சீனா சொல்வதை எப்படி நம்புவது. அவர்கள் சொல்லும் கணக்கு சற்றுக் குறைவாக அல்லவா உள்ளது,” என்று பீகிர் கிளப்பும் கருத்தைத் தெரிவித்தார். 

அதே நேரத்தில் டிரம்ப், “சீனாவுடன் நல்ல நட்புறவுதான் உள்ளது. அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் உடன் நெருக்கமாகவே உள்ளேன்,” என்றார். 

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பனிப் போர் நடந்து வருகிறது. அமெரிக்கத் தரப்பு, கொரோனா வைரஸை ‘சீன வைரஸ்', ‘உஹான் வைரஸ்' என்று சர்ச்சைக்குரிய வகையில் முத்திரை குத்தியது. 

இதற்குக் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்த சீனத் தரப்பு, “அமெரிக்க ராணுவம் கூட கொரோனா வைரஸை சீனாவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்,” என்று கூறி அதிர்ச்சி கொடுத்தது. இதனால் இரு நாட்டின் முக்கியப் புள்ளிகளும் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். 

ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், சமீபத்தில் ஒரு அரசின் ரகசிய ஆவணத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது. அதில் வந்திருக்கும் தகவல்படி, சீனா, கொரோனா விவகாரத்தில் பொய் சொல்லி இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 

சீனா, கொரோனா வைரஸால், தங்கள் நாட்டில் 82,361 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும், 3,316 பேர் உயிரிழந்தனர் என்றும் கூறியதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறுகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவில் இதுவரை 2,06,207 பேருக்கு கொரோனா இருப்பதும், 4,542 பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த இரு எண்ணிக்கைகளை ஒப்பிட்டுத்தான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. 

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் பென் சாஸே, “இது சீனாவால் செய்யப்படும் குப்பைப் பிரசாரம். சீனாவைவிட அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிற தகவல் மிகத் தவறானது,.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, கொரோனா குறித்துப் பொய் சொல்லியிருக்கிறது. அவர்களின் அரசைக் காக்கத் தொடர்ந்து பொய் சொல்லும்” என்கிறார். 

இந்தக் கருத்தை ஏற்கும் வகையில், டிரம்ப் நியமித்த, கொரோனா வைரஸ் டாஸ்க் படையைச் சேர்ந்த மருத்துவர் டெபோரா பிர்க்ஸ், “சீனாவில் கொரோனா பரவியபோது, அதைப் பிரச்சினையாக மருத்துவ உலகம் பார்த்தது. ஆனால், இவ்வளவு பெரிய பிரச்சினையாகப் பார்க்கவில்லை. காரணம், அங்கு முக்கியமான தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்,” என்று சந்தேகம் எழுப்புகிறார். 

.