தப்லீக் ஜமாத் விவகாரம்: மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

Coronavirus: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கானோர் மார்ச் 8-10 தேதிகளில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான "நிஜாமுதீன் மர்காஸில்" ஒரு நிகழ்ச்சிக்காகக் கூடியுள்ளனர்.

தப்லீக் ஜமாத் விவகாரம்: மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

Coronavirus: கொரோனா தொற்று காரணமாக டெல்லி நிஜாமுதீனில் இருந்து வெளியேறும் மக்கள்.

ஹைலைட்ஸ்

  • மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!
  • மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 128 பேருக்கு கொரோனா
  • 7 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர்.
New Delhi:

டெல்லி நிஜாமுதீனில் நடந்த பெரும் மதக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 7 பேர் கொரோனா தொற்றில் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து, கொரோனா பரவுவதற்கான சாத்தியங்களுடன் நாடு முழுவதும் பரவியிருக்கும் தப்லீக் ஜமாத்தின் உறுப்பினர்கள் குறித்து மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கானோர் மார்ச் 8-10 தேதிகளில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான "நிஜாமுதீன் மர்காஸில்" ஒரு நிகழ்ச்சிக்காகக் கூடியுள்ளனர். இதில் மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பலரும், நிஜாமுதீன் தலைமையகத்தில் தங்கியுள்ளனர். பின்னர், பல்வேறு இந்தியர்களும், வெளிநாட்டவர்களும் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளனர். நாடு முழுவதும் இவர்களைக் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் மார்ச்.28ம் தேதி வெளியிட்டுள்ள கடிதத்தில், சுற்றுலா விசாவில் உள்ள அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளும், உரிய சோதனைகள் மேற்கொண்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், தப்லீக் ஜமாத்தின் உறுப்பினராக இருக்கும் எந்தவொரு உறுப்பினரையும், கொரோனா சோதனைக்கு உட்படுத்தலாம் தேவைப்பட்டால் அவர்களை அவர்களை தனிமைப்படுத்தலாம்.  

அப்படி சோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டால், உடனடியாக அடுத்து கிடைக்கூடிய முதல் விமானத்தில் அவர்களை நாடு கடத்த வேண்டும் என்றும் அதுவரை, அத்தகைய நபர்கள் அந்த அமைப்பினரால் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுற்றுலா விசாவில் வந்தவர்கள் இதுபோன்ற மதக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்கள் விசாவை மீறுபவர்களாகக் கருதப்படுவார்கள். சுற்றுலா விசாவில் வந்தவர்கள் தப்லீக் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதியில்லை என நிஜாமுதீன் மார்காஸை டெல்லி காவல் ஆய்வாளர் எச்சரிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

உள்துறை அமைச்சகத்தின் தரவுகளின் படி, கடந்த ஜன.1ம் தேதி முதல் இந்தியா வந்த 2,100 வெளிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தப்லீக் ஜமாத் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.